சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே இளம் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை ரகசியமாக ஆபாசமாக வீடியோ எடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் இருந்த 100-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்களையும் போலீசார் அழித்தனர்.
காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில், ஷால் அணியாத மற்றும் லெக்கின்ஸ் அணிந்திருந்த இளம் பெண்கள், கல்லூரி மாணவிகளை குறிவைத்து ஒருவர் செல்போனில் ரகசியமாக ஆபாசமாக வீடியோ பதிவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பள்ளத்தூர் பேருந்து நிலையத்தில் இளம் பெண் ஒருவரை மறைமுகமாக வீடியோ எடுத்ததை அவர் கவனித்துள்ளார். உடனடியாக பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் பள்ளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரைக்குடி அருகே கானாடுகாத்தான் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (45) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து இரண்டு செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
போலீசார் செல்போன்களை ஆய்வு செய்தபோது, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ரகசியமாக ஆபாசமாக வீடியோ பதிவு செய்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த வீடியோக்களை போலீசார் நீக்கி அழித்தனர்.
தொடர்ந்து செந்தில்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.













Leave a Reply