கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி க்யூஆர் (QR) கோடு ஸ்கேன் செய்ய வைத்த மர்ம நபர்கள், கல்லூரி மாணவரின் வங்கி கணக்கில் இருந்த ரூ.1.21 லட்சத்தை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கொடுங்கையூர் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த முத்து காமாட்சி (50), கடந்த 20 ஆண்டுகளாக ஊறுகாய் மற்றும் ஜாம் விற்பனை செய்து வருகிறார். அவரது மகன் மகாலிங்கம், ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு முடித்து, தற்போது கோட்டூர்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 17-ஆம் தேதி, மகாலிங்கத்திற்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு வழங்கப்படும் ரூ.48,500 கல்வி உதவித்தொகை அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அந்தத் தொகை வங்கி கணக்கில் வர வேண்டுமெனில், தாங்கள் அனுப்பும் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
அதை உண்மையென நம்பிய மகாலிங்கம், தனது செல்போனில் இருந்து க்யூஆர் கோடை ஸ்கேன் செய்துள்ளார். சில நொடிகளில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1.21 லட்சம் பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தந்தை முத்து காமாட்சியிடம் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, முத்து காமாட்சி புளியந்தோப்பு துணை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். பின்னர் இந்த வழக்கு கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. புகாரின் அடிப்படையில் சைபர் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்கள், அரசு உதவித்தொகை அல்லது பரிசுத் தொகை வழங்குவதாகக் கூறி வரும் அழைப்புகளை நம்பி, யாரும் அனுப்பும் QR கோடுகளை ஸ்கேன் செய்ய வேண்டாம் என்றும், சந்தேகமான அழைப்புகள் வந்தால் உடனடியாக சைபர் குற்றப்பிரிவில் புகார் அளிக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.













Leave a Reply