Advertisement

வக்கீல் வீட்டில் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்: கணவர் தப்பியோட்டம், மனைவி கைது

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் வக்கீல் ஒருவரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் பெண் வக்கீல் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது கணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின்போது, சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 134 கிலோ குட்கா பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.1.50 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். போலீசார் வீட்டை சோதனை செய்துக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஒருவர் சுவர் ஏறி குதித்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

வீட்டில் இருந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் வக்கீல் ரேகா (38) என்பதும், தப்பியோடிய நபர் அவரது கணவர் சந்தோஷ் என்பதும் தெரியவந்தது. மேலும், வக்கீல் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரை பயன்படுத்தி கர்நாடக மாநிலத்தில் இருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்ததாகவும், பின்னர் சந்தோஷ் ஸ்கூட்டர் மூலம் புஞ்சைபுளியம்பட்டி, அன்னூர், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகளுக்கு விநியோகம் செய்து வந்ததாகவும் போலீசார் விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.

இதையடுத்து, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக வக்கீல் ரேகாவை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது கணவர் சந்தோஷை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *