புதுச்சேரி: கருவடிக்குப்பம் பகுதியில் வீடுபுகுந்து பெண்ணை கத்திரிக்கோலால் குத்திக் கொலை செய்து, 6 பவுன் நகைகளை கொள்ளையடித்த இளம்தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கருவடிக்குப்பம் கெங்கையம்மன் கோயில் வீதியில் வசித்து வந்த மணி (48) மற்றும் அவரது மனைவி ரமணி (42) ஆகியோர் டிபன் கடை நடத்தி வந்தனர். நேற்று மதியம் வீட்டிற்கு திரும்பிய மணி, வீட்டின் உள்ளே ரமணி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நடத்திய விசாரணையில், ரமணி கத்திரிக்கோலால் கழுத்து, தலை மற்றும் முகத்தில் பலமுறை குத்திக் கொலை செய்யப்பட்டிருப்பதும், அவர் அணிந்திருந்த 6 பவுன் தாலிச் செயின் மற்றும் கம்மல் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், ரமணியின் உறவினரின் நண்பரான பிரவீன் (25) என்பவரே இந்தக் கொலையை திட்டமிட்டு நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டில் சாவி வைக்கப்படும் இடம் மற்றும் அண்டை வீட்டினர் வெளியூர் சென்றிருந்த தகவலை முன்கூட்டியே அறிந்திருந்த அவர், நகைக்காக வீட்டுக்குள் நுழைந்து ரமணியை கொலை செய்துவிட்டு, வீட்டை பூட்டிவிட்டு தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் முத்தியால்பேட்டையில் பதுங்கியிருந்த பிரவீனை போலீசார் கைது செய்தனர். சம்பவத்தின் போது அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் அவரது மனைவி ஈஸ்வரியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை மற்றும் நகை கொள்ளை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கைப்பற்றப்பட்ட நகைகள் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.













Leave a Reply