Advertisement

திருடின நகைகளை ஒரு பெண்ணிடம் கொடுத்தோம்’ – திருட்டு வழக்கில் பரபரப்பு வாக்குமூலம்!

புதுக்கோட்டை மாவட்டம் கீமங்கலம் காவல் சரகம் கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி. இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லதா, 2 குழந்தைகளுடன் ஊரில் வசித்து வருகிறார். கடந்த மாதம் 29 ந் தேதி புதன் கிழமை கொத்தமங்கலம் பிடாரியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழாவிற்கு சென்று இரவில் வீடு திரும்பி தான் அணிந்திருந்த தங்க நகைகளை பெட்டியில் வைக்க பெட்டியை திறந்த போது பெட்டியில் இருந்த சங்கிலிகள், நோடுகள், மோதிரம், நெக்லஸ்கள் என சுமார் 40 பவுன் தங்க நகைகளை காணாமல் போய் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து தனது கணவருக்கும் கீரமங்கலம் போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

கீரமங்கலம் காவல் ஆய்வாளர் சத்யாதேவி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். தடயவியல் சோதனைகளும் நடந்தது. அதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் ஆலங்குடி டிஎஸ்பி மனோகர், தலைமைக் காவலர் புருசோத்தமன் தலைமையில் தலைமை காவலர் கணபதி, போலீசார் முத்துக்குமார், சின்னச்சாமி ஆகியோர் கொண்ட தனிப்படை நியமித்து தேடும் பணியில் ஈடுபட்டனர். சில நாட்கள் தடயங்களைச் சேகரித்த தனிப்படை போலீசாருக்கு அதே பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் கடந்த ஒரு வாரமாக லதா வீட்டை நோட்டடம் பார்த்தது தெரிய வந்தது. அந்த இரு இளைஞர்கள் பற்றிய தகவல்களை சேகரித்த போலீசார் கொத்தமங்கலம், ஆலங்குடி பகுதியில் உள்ள நகைக்கடை, நகை அடகு கடைகளிலும் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது ஆலங்குடியில் உள்ள ஒரு நகைக்கடையில் கொத்தமங்கலத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் தங்கத் தோடு, சங்கிலியை விற்கச் சென்று தோடுகளை மட்டும் விற்று பணம் வாங்கிச் செல்வது தெரிய வந்தது. அந்த இரு இளைஞர்கள் கொத்தமங்கலம் மையம் ராசப்பன் மகன் ரஞ்சித், அருள் ஆகியவர்கள் என்பதை அடையாளம் கண்டு தனிப்படை போலீசார் அழைத்துச் சென்று விசாரனை செய்தனர்.

அதில் பல அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்துள்ளது. அந்த இளைஞர்கள் போலீசாரிடம் கூறும் போது, கடந்த புதன் கிழமை முளைப்பாரி திருவிழா நடந்த போது ஊரில் அனைவரும் திருவிழாவிற்கு சென்றுவிட்டனர். அந்த நேரத்தைப் பயன்படுத்தி கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி கணேசன் மகன் கலையரசன் மற்றும் ராஜேந்திரன் மகன் ரஞ்சித் ஆகியோர் லதா வீட்டில் தங்க நகைகளை திருடிவிட்டு மது குடித்துள்ளனர். அவர்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த எங்கள் நண்பன் கருப்பு ராஜாவும் மது குடித்த போது அவர்கள் திருடிய நகைகள் வைத்திருப்பதை தெரிந்து கொண்டு வந்தான். எங்களிடம் வந்த கருப்பு ராஜா,  லதா வீட்டில் திருடிய நிறைய நகைகள் ரஞ்சித்திடம் இருக்கு அவன் போதையில் மட்டையாகிட்டான் இப்ப  நாம போனால் அந்த நகைகளை எடுத்துடலாம் என்று சொன்னான்.

நாங்களும் போய் அவனிடம் இருந்த நகைகளை அள்ளிட்டோம். மேலும் கொஞ்ச நகைகள் அவனிடம் இருந்தது. நாங்க எடுத்து வந்த நகைகளை பேட்டையில் உள்ள ஒரு முஸ்லிம் பெண்ணிடம் கொடுத்து வச்சிருந்தோம். ஒரு ஜோடி வளையல்களை எங்களுக்கு தெரியாமல் எங்களுடன் வந்த நண்பன் எடுத்து போய் ரொம்ப நாளா உனக்கு நான் வாங்கி வச்சிருந்த வளையல்கள் என்று அவங்க அம்மாவிடம் சொல்லி கொடுத்துட்டான். நாங்க கொடுத்த நகைகளை வாங்கிக் கொண்ட அந்த முஸ்லிம் பெண் எங்களிடம் ஒரு ஜோடி தோடும், ஒரு சங்கிலியும் கொடுத்தாங்க. அதை ஆலங்குடியில் விற்கச் சென்ற போது தோடுகள் தங்கம் ஆனால் சங்கிலி கவரிங் என்பது தெரிந்தது. அவ்வளவு நகைகளை எங்களிடம் வாங்கிக் கொண்ட முஸ்லிம் பெண் எங்களிடம் கவரிங் நகையை கொடுத்து ஏமாற்றியது தெரிய வந்தது. தோடு விற்கச் சென்ற போது தான் சிசிடிவியில் சிக்கி இருக்கிறோம் என்று கூறியுள்ளனர்.

முஸ்லிம் பெண்ணிடம் நடத்திய விசாரனையில், அவர்கள் நகைகளை கொடுத்த தங்க நகைகளை கீரமங்கலத்தில் உள்ள தனியார் நிதிநிறுவனங்களில் அடகு வைத்திருப்பதாக சொல்ல கீரமங்கலம் காவல் ஆய்வாளர் சத்யாதேவியுடன் சென்ற தனிப்படை போலீசார் அடகு வைத்த நகைகளை மீட்டனர். தொடர்ந்து வளையல்களையும் மீட்டனர். மற்றொரு பக்கம் கலையரசன், ரஞ்சித்தை தேடும் பணியில் தீவிரமாக இருந்தனர். அவர்கள் இருவரும் மற்றொரு நண்பனுடன் கொடைக்கானலில் இருப்பது தெரிந்து தனிப்படை போலீசார் கொடைக்கானல் போன போது அவர்கள் திண்டுக்கல்லில் இருப்பது தெரிந்து இருவரையும் பிடித்தனர். அவர்கள் கூறும் போது, தங்கமணி 20 வருசமா சிங்கப்பூரில் இருக்கிறார். நிறைய நகைகள் வாங்கி வைத்திருக்கிறார் என்று தெரியும். அதனால் ஒரு வாரமாக அவர் வீட்டை நோட்டம் விட்டோம். முளைப்பாரி அன்று ஊரே திருவிழாவிற்கு போனதும் நாங்க லதா வீட்டுக்குள் ஒரு ஓட்ட வழியாக இறங்கி உள்ளே போனதும் ஒரு சூட்கேஸ் திறந்து கிடந்தது. அதில் நிறைய தங்க நகைகள், வெள்ளி கொலுசுகள் இருந்ததைப் பார்த்து அள்ளிக் கொண்டு அதே வழியாக வெளியேறி பக்கத்தில் வைத்தே பங்கு வைத்தோம். பிறகு மது குடித்தோம்.

அப்ப தான் கருப்பு ராஜாவும் எங்களுடன் குடித்தான். மது குடித்ததும் ரஞ்சித் மட்டை ஆகிட்டான் கலையரசனான நான் ஒரு மோதிரத்தை மட்டும் கொத்தமங்கலத்தில் கீரமங்கலம் சாலையில் உள்ள அடகு கடையில் கொடுத்துட்டு ரூ.25 ஆயிரம் வாங்கிட்டு கொஞ்சம் சில்லரை நகைகளை மட்டும் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு மீதி நகைகளை ஒரு கவரில் வைத்து சுற்றி கால்நடை மருத்துவமனை – மாணவர் விடுதிக்கு அருகே புதைத்து வைத்து விட்டு கொடைக்கானல் வந்துவிட்டேன்.

அதே போல ரஞ்சித் அவன் பங்கு நகைகளை மற்றவர்களிடடம் பறி கொடுத்தது போக மீதமுள்ள நகைகளில் ஒன்றை அவன் வெளிநாடு போக வாங்கிய ரூ.2 லட்சம் கடனை அடைக்க கொடுத்துவிட்டு அவனும் என்னைத் தேடி கொடைக்கானல் வந்துவிட்டான். இருவருடன் இன்னொரு நண்பனும் இருந்ததால் செலவுக்கு ஒரு நகையை விற்க தான் திண்டுக்கல் வந்த போது இருவரும் சிக்கிட்டோம் என்று கூறி கிறுகிறுக்க வைத்துள்ளனர். மேலும் கலையரசன் புதைத்து வைத்திருந்த நகைகளை போலீசார் முன்னிலையில் தோண்டி எடுத்து கொடுத்த கலையரசன் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த சில சின்ன நகைகளையும் தனிப்படை போலீசார் மீட்டனர். இவர்கள் விற்ற சினனச் சின்ன நகைகள் போக மீதமுள்ள நகைகளை மீட்ட போலீசார் லதாவின் நகைகள் பட்டியலுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது மீட்கப்படாத நகைகள் சுமார் 8 பவுன் வரை காணாமல் போய் உள்ளது. நெக்லஸ் உள்பட மீட்கப்படாத நகைகளை மீட்கும் முயற்சியில் உள்ளனர் போலீசார். நகைகள் மீட்கப்பட்ட நிலையில் லதா வீட்டில் திருடிய கலையரசன் மற்றும் ரஞ்சித் ஆகிய இருவர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்த கீரமங்கலம் போலீசார் அவர்களை சிறைக்கு அனுப்பி உள்ளனர். ஆனால் திருடர்களிடம் இருந்து தங்க நகைகளை திருடிய கருப்பு ராஜா, ரஞ்சித், அருள் மற்றும் முஸ்லிம் பெண்ணை வழக்கில் சேர்க்கவில்லை. அதனால் அவர்கள் சுதந்திரமாக ஊருக்குள் சுற்றி வருகின்றனர். நகை திருடர்களை வெளியில் சுற்றுவதால் இவர்களால் நமக்கு தீங்கு வருமோ என்று கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். பொதுமக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வதுடன் திருட்டு நகைகளை வாங்கி அடகு வைத்திருந்த முஸ்லிம் பெண் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் கிராம மக்கள். நடவடிக்கை இல்லை என்றால் அடுத்து யார் வீட்டில் திருடுவார்களோ என்கின்றனர். தங்க நகைகள் திருட்டு போய் ஒரே வாரத்தில் மீட்ட தனிப்படை போலிசாரை பொது மக்களும் காவல்துறை அதிகாரிகளும்பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *