Advertisement

நடத்தை சந்தேகத்தில் மனைவி கொலை: தலைமறைவான கணவர் கைது; சேலையால் கழுத்தை நெரித்து கொன்றதாக வாக்குமூலம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நடத்தை சந்தேகத்தால் மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தோட்டாளம் ஊராட்சிக்குட்பட்ட உடையராஜபாளையத்தைச் சேர்ந்தவர் பாபு (35). ஹாலோபிளாக் கல் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஸ்ரீதேவி (34). கடந்த சில மாதங்களாக மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இதுதொடர்பாக தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஸ்ரீதேவி தனது தாய் வீட்டிற்கு சென்று தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாமியார் வீட்டிற்கு சென்ற பாபு, மனைவியை சமாதானப்படுத்தி மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

ஆனால் மறுநாள் காலை ஸ்ரீதேவி வீட்டில் உயிரிழந்த நிலையில் கிடந்தார். இதையடுத்து பாபு தலைமறைவானது சந்தேகத்தை ஏற்படுத்தியது. தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதுடன், தலைமறைவான பாபுவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு இன்று காலை மறைவிடத்தில் பதுங்கியிருந்த பாபுவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் மீண்டும் தம்பதியிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஆத்திரமடைந்த அவர் அருகில் இருந்த சேலையால் ஸ்ரீதேவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து பாபு மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *