Advertisement

பள்ளிக்கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைவா?” – அமைச்சர் ராஜ் மோகன் விளக்கம்!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் நெ. மரிய வில்சன் நேற்று (05.08.2026) தாக்கல் செய்தார். இதில், பள்ளிக்கல்வித் துறைக்கு 44 ஆயிரத்து 527 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “கல்வி மட்டுமே யாராலும் பறிக்க முடியாத சொத்து என உரக்கச் சொல்லும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு ஏறுமுகத்திலேயே இருந்தது.

ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டதைக் காட்டிலும், குறைவான நிதியே தற்போதைய அரசால் ஒதுக்கப்படுவது தற்போது வெளியான நிதிநிலை அறிக்கை மூலம் தெரியவருகிறது. கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்றென்றும் தொடர்வதை உறுதிசெய்ய வேண்டியது அரசின் கடமை என்பதை மறந்துவிட வேண்டாம்” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன், ‘வெற்றிக் கழக பட்ஜெட்டே பள்ளிக்கல்விக்கு உண்மையான நிதி உயர்வை தந்துள்ளது’ எனக் குறிப்பிட்டு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2025-26 திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதி 46,767 கோடி ரூபாய். இதில், இடைக்கால பட்ஜெட்டுக்கு முன்பு வரை செலவிடப்பட்ட தொகை 42,351 கோடி ரூபாய் மட்டும் தான்.

இடைக்கால பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், பல ஊதிய வரம்புகளையும், செலவினங்களையும் மிகை மதிப்பீடு செய்து திமுகவின் கடைசி பட்ஜெட்டான 2026-27 இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு 48,534 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டது. அதாவது, 2025-26 முழுமையான ஆண்டு பட்ஜெட்டில் உண்மையாக செலவு செய்யப்பட்டதைவிட சுமார் 6003 கோடி ரூபாய் காரணமே இல்லாமல் உயர்த்தப்பட்டது. காரணமற்ற இந்த உயர்வுக்கு பின்னால் இருந்தது தவறான கணக்கீடுகளும், தேவையற்ற நிதி உயர்வுகளும் மட்டுமே. வெற்றிக்கழக ஆட்சி அமைந்ததும் அதை முறையாக சரிசெய்து, காரணமற்ற நிதி உயர்வுகளை குறைத்து, 2025-26 திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு செலவிடப்பட்டதைவிட சுமார் 2176 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதைக்குறித்து நிதித்துறை செயலாளர் தெளிவான விளக்கம் அளித்துள்ளார். வெற்றிக்கழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ள இந்த 44,527 கோடி ரூபாயை முதலமைச்சர் விஜய்யின் வழிகாட்டுதல் படி திறம்பட கையாண்டு, முழுமையான பலன்கள் மாணவர்களையும், ஆசிரியர்களையும், பள்ளிக்கல்வி நிர்வாகத்தையும் சென்று சேரும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த உண்மையான கூடுதல் ஒதுக்கீடு, பள்ளிக்கல்வித்துறையின் மேன்மையான லட்சியங்களை முழுமையாக நிறைவேற்றும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *