தூத்துக்குடியில் கைதி அருணாச்சலம் மரணமடைந்தது லாக்-அப் டெத் அல்ல என, நகர துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் விளக்கமளித்துள்ளார்.
தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட இளைஞர் அருணாச்சலம் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது லாக்-அப் மரணம் அல்ல என்று தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) சுனில் விளக்கம் அளித்துள்ளார். அதேவேளையில், காவல்துறையினர் தாக்கியதால்தான் அருணாச்சலம் உயிரிழந்ததாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த 26 வயதான அருணாச்சலம், சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்றதாகக் கூறி கடந்த 17-ஆம் தேதி தென்பாகம் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 120 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. விசாரணையின்போது 4 காவலர்கள் தாக்கியதால் தலை, கை, கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். பின்னர் அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
இந்நிலையில் டிஎஸ்பி சுனில் விளக்கம் அளிக்கையில், காவல் நிலையத்தில் அருணாச்சலம் திடீரென மயங்கி விழுந்ததாகவும், உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, காவலர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்தார். மருத்துவர்கள் அருணாச்சலத்தின் தலையில் ஏற்கனவே கட்டி இருந்ததாக கூறியதாகவும், காவல்துறையினர் அவரை தாக்கவில்லை என்றும், எனவே இது லாக்-அப் மரணம் அல்ல என்றும் விளக்கமளித்தார்.
ஆனால், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது எந்த காயமும் இல்லாத அருணாச்சலத்தின் உடலில் பின்னர் பலத்த காயங்கள் ஏற்பட்டது எப்படி என்று அவரது குடும்பத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது உறவினர் எடுத்த வீடியோவில், “போலீசார் தாக்கிய பிறகுதான் தனக்கு வலிப்பு ஏற்பட்டது” என்று அருணாச்சலம் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்வரை உடலை வாங்கமாட்டோம் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். டிஎஸ்பியின் விளக்கமும், குடும்பத்தினரின் குற்றச்சாட்டும் மாறுபட்டுள்ள நிலையில், இந்த மரணம் தொடர்பான விசாரணை முக்கியத்துவம் பெற்றுள்ளது.













Leave a Reply