Advertisement

“சீமான்னா யாரு?” – அமைச்சர் விஜய் பாலாஜி பேச்சால் மீண்டும் சர்ச்சை; சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம்

தமிழக கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் விஜய் பாலாஜி, தனது தொடர் சர்ச்சை பேச்சுகளால் மீண்டும் அரசியல் விவாதத்தின் மையமாகியுள்ளார். இந்த முறை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து அவர் தெரிவித்த கருத்து சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் விஜய் பாலாஜியிடம், அம்பேத்கர் சிலை அமைப்பது தொடர்பாக சீமான் தெரிவித்த கருத்துக்கு பதில் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், “சீமான்னா யாரு?” என்று செய்தியாளரிடமே எதிர் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஒரு எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பியிருந்தால் அதற்கு பதில் சொல்லலாம். ஆனால் எந்த மக்கள் பிரதிநிதித்துவப் பொறுப்பிலும் இல்லாத, தேர்தலில் ஒருமுறைகூட வெற்றி பெறாத ஒருவரின் கருத்துக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்தார்.

அமைச்சரின் இந்த கருத்து வெளியாகிய சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியது. சீமான் ஆதரவாளர்கள் மற்றும் பல்வேறு இணைய பயனர்கள், அரசியல் எதிர்ப்பாளர்களை மரியாதையுடன் அணுக வேண்டிய பொறுப்பு அமைச்சருக்கு இருப்பதாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கு முன்பும் அமைச்சர் விஜய் பாலாஜி பேசிய சில கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. கடந்த மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்த வழியாக காரில் சென்ற திமுக எம்.பி. கதிர் ஆனந்தை அழைத்ததுடன், “அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது” என்று பேசியது எதிர்க்கட்சியினரின் விமர்சனத்திற்கு உள்ளானது.

மேலும், முதலமைச்சர் விஜயின் பிறந்தநாள் விழாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “2026 தேர்தலில் எங்களை வெற்றி பெறச் செய்தது மக்களே செய்த மிகப்பெரிய ஊழல்” என்ற பொருளில் அவர் பேசியதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. எதிர்க்கட்சிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு தவெகவுக்கு வாக்களித்ததாக பொருள் கொள்ளும் வகையில் அவரது பேச்சு இருந்ததாகவும் விமர்சிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக அமைச்சர் விஜய் பாலாஜியின் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், ஆளுங்கட்சி அமைச்சர்களின் பேச்சு அரசின் மீதான பொதுமக்களின் பார்வையை பாதிக்கக் கூடும் என்பதால், பொறுப்புடன் கருத்து தெரிவிக்க வேண்டும் என்ற கருத்தும் சமூக வலைதளங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதேசமயம், சீமான் ஆதரவாளர்கள் அமைச்சர் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *