Advertisement

உன் மனைவியை என்னுடன் அனுப்பிடு ” வீட்டிற்கே சென்று கணவரிடம் தகராறு ஏற்படுத்திய நபர் கைது

சென்னை கொளத்தூரில் திருமணமான பெண்ணுக்கு தொடர்ந்து தொல்லை அளித்து, அவரது வீட்டிற்குச் சென்று குடும்பத்தினரிடம் தகராறு செய்ததாக கூறப்படும் நபரை ராஜமங்கலம் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மனஉளைச்சலுக்கு ஆளான பெண் விஷப்பொருள் அருந்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

போலீஸார் கூறியதாவது:

கொளத்தூரைச் சேர்ந்த 31 வயதுடைய திருமணமான பெண் ஒருவர், தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 2011-ஆம் ஆண்டு விநாயகபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, பத்மநாபன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த தொடர்பை அவர் முறித்துக் கொண்டதாக தெரிகிறது.

இந்நிலையில், அண்மைக் காலமாக பத்மநாபன், அந்தப் பெண்ணை தொலைபேசி மூலமும், அவர் பணியாற்றும் இடத்திற்குச் சென்றும் தொடர்புகொண்டு, தன்னுடன் வாழ வேண்டும் என வற்புறுத்தி தொல்லை அளித்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “என் குடும்பம் பிரிந்ததற்கு நீயே காரணம்” என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, பத்மநாபன் அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்று, அவரது கணவரிடம் தகராறு செய்து கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தால் மனஉளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண், வீட்டில் இருந்த விஷப்பொருளை அருந்தியதாக போலீஸார் தெரிவித்தனர்.

உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பெண் அளித்த புகாரின் பேரில், ராஜமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில், திரு.வி.க. நகர் கே.சி. கார்டன் 3-வது தெருவைச் சேர்ந்த பத்மநாபனை கைது செய்த போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *