Advertisement

மனைவியை சமாதானம் செய்து அழைத்துச் செல்ல வந்த கணவன் ஆவேசம்.. கத்தியால் குத்திக்கொலை;

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக தாய் வீட்டில் வசித்து வந்த மனைவியை சமாதானம் செய்து அழைத்துச் செல்ல வந்த கணவன், ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு கர்நாடக மாநில காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் உனுசனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தப்பாவின் மகன் ராஜேஷ் (30). இவருக்கும், ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை அடுத்த மல்லிகைபாய்தொட்டி கிராமத்தைச் சேர்ந்த சுஷ்மிதாவுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 வயது ஆண் குழந்தை உள்ளது.

திருமணமானது முதல் கணவன்–மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த சுஷ்மிதா, மூன்று மாதங்களுக்கு முன்பு தனது குழந்தையுடன் தாய் வீட்டுக்குச் சென்று அங்கேயே தங்கியிருந்தார்.

இந்த நிலையில், மனைவியை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் நோக்கில் ராஜேஷ், தனது பெற்றோர் மற்றும் உறவினர்கள், ஊர் பெரியவர்கள் உள்ளிட்டோருடன் மல்லிகைபாய்தொட்டி கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்கு மாமனார், மாமியாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுஷ்மிதாவை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஆனால், ராஜேஷ் தினமும் மது அருந்திவிட்டு வந்து சுஷ்மிதாவை அடித்து துன்புறுத்தியதாகக் கூறி, அவரை அனுப்பி வைக்க மனைவியின் பெற்றோர் மறுத்துள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த ராஜேஷ், தன்னுடன் வருமாறு சுஷ்மிதாவை வற்புறுத்தியதுடன், திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தியதாகக் கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த சுஷ்மிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தளி போலீசார், சுஷ்மிதாவின் உடலை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில், கொலை செய்துவிட்டு தப்பியோடிய ராஜேஷ், கர்நாடக மாநிலம் கோடள்ளி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக தளி போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பப் பிரச்சினையை பேசி தீர்க்க நடைபெற்ற சந்திப்பு கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *