ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே ஏரிக்கரையில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட டீ மாஸ்டர், கள்ளத் தொடர்பு தகராறில் கொலை செய்யப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக கட்டிடத் தொழிலாளி, அவரது மனைவி மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அரக்கோணம் அருகே தணிகைப்போளூர் ஏரியில் கடந்த 5-ம் தேதி அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது. அரக்கோணம் தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், உயிரிழந்தவர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பி.டி.புதூரைச் சேர்ந்த ஹேமநாதன் (23) என்ற டீ மாஸ்டர் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அரக்கோணம் அருகே கீழாந்தூர் பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி சங்கரின் (39) மனைவி கவிதாவுக்கு (35), ஹேமநாதனுடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் அது கள்ளத் தொடர்பாக மாறியதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
இதனால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், ஹேமநாதனை முன்கூட்டியே கண்டித்திருந்த சங்கர், சம்பவத்தன்று அவரை சமாதானம் பேசுவதாக கூறி, ஆட்டோ ஓட்டுநர் ஆனஸ்ட் (33) உதவியுடன் தணிகைப்போளூர் ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு உருட்டுக்கட்டை மற்றும் கத்தியால் தாக்கி கொலை செய்துவிட்டு, முகத்தை சிதைத்து சடலத்தை வீசிச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, சங்கர், அவரது மனைவி கவிதா மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஆனஸ்ட் ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும், கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கத்தி, உருட்டுக்கட்டை மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.













Leave a Reply