Advertisement

அரசு மருத்துவமனையில் மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை; கால் விரல்களை கடித்துக் குதறிய எலிகள்; நிர்வாக அலட்சியம் காரணமா ?

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 68 வயது மூதாட்டியின் கால் விரல்களை நள்ளிரவில் புகுந்த எலிகள் கடித்துக் குதறிய சம்பவம், அரசு மருத்துவமனைகளின் சுகாதாரச் சீர்கேட்டையும் நிர்வாக அலட்சியத்தையும் அம்பலப்படுத்திப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 68 வயது மூதாட்டியின் கால் விரல்களை எலிகள் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த மூதாட்டிக்கு எலி கடித்தது உடனடியாகத் தெரியவராத நிலையில், சக நோயாளிகள் சுட்டிக்காட்டிய பிறகே சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த அலட்சியப்போக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம். இவருடைய மனைவி தமிழ்க்கொடி (வயது 68). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் எதிர்பாராத விதமாகத் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருடைய கால் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காகத் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு, அங்குள்ள பொது வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குக் காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த மூன்று தினங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் தமிழ்க்கொடி காலில் கட்டுடன் படுக்கையில் படுத்திருந்த நிலையில், நேற்று நள்ளிரவில் வார்டுக்குள் புகுந்த எலிகள், அவரது காலில் காயம் இருந்த பகுதியைத் தின்று கடித்துக் குதறியுள்ளன.

அதீத சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு எலிகள் கடித்தது தெரியவில்லை. சக நோயாளிகள் கூறிய பிறகே எலி கடித்தது குறித்து அவருக்கு தெரிந்துள்ளது. இதுகுறித்து மூதாட்டியின் மகன் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து மருத்துவக் குழுவினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விரைந்து வந்து தமிழ்கொடியை  பரிசோதித்த மருத்துவ குழுவினர் தமிழ்கொடிக்கு எலிகடி தடுப்பூசியை செலுத்தியுள்ளனர். இதனால் திருச்சியில் பெரும் பரபரப்பு நிலவியது.

முன்னதாக, ஒருபுறம் மருத்துவமனையில் நோயாளி எலியால் கடிக்கப்பட்டு அவதியுற்ற நிலையில், இச்சம்பவம் நடந்த அதே நேரத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரையரங்கிற்குச் சென்று ஜனநாயகன் படம் பார்த்த செய்தி வெளியாகி மேலும் சர்ச்சையைக் கூட்டியுள்ளது. அடிப்படைச் சுகாதாரத்தையும் நோயாளிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய பொறுப்பில் உள்ள அரசு, இத்தகைய அசம்பாவிதங்கள் மீண்டும் நடக்காத வண்ணம் உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் பலத்த கோரிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *