கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வக்கீல் பதவி பெற்றுத் தருவதாகக் கூறி, பெண் வழக்கறிஞரிடம் ரூ.15 லட்சம் கேட்டு பேரம் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வைரலாகியுள்ள அந்த ஆடியோவில், அரசு வக்கீல் பதவிக்கு பலர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் அவரது பெயரை பரிந்துரைக்க முடியும் என்றும், அதற்காக ரூ.15 லட்சம் வழங்க வேண்டும் என்றும் கூறப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 10 நாட்களுக்குள் நியமனம் கிடைத்துவிடும் என்றும், பின்னர் பத்திரப்பதிவு தொடர்பான வழக்குகள் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்றும் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதற்கு பதிலளிக்கும் பெண் வழக்கறிஞர், அவ்வளவு பெரிய தொகையை வழங்க முடியாது என்றும், பணம் சம்பாதிப்பதற்காக அல்லாமல் கட்சிக்கும் மக்களுக்கும் சேவை செய்யும் நோக்கத்திலேயே அரசு வக்கீல் பொறுப்பை விரும்புவதாகவும் தெரிவிக்கிறார். தொடர்ந்து பேரம் பேசியதாகக் கூறப்படும் நபர், ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.12.50 லட்சமாக குறைத்து வழங்குமாறு கூறுவதும் ஆடியோவில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆடியோவின் உண்மைத்தன்மை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த விவகாரம் கட்சித் தலைமை கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக உள்கட்சி விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது








Leave a Reply