Advertisement

மீனாட்சி கோவில் நில மோசடி: துணை ஆட்சியர் அன்பழகன் அதிரடி பணியிடை நீக்கம் – ஆணையர் உத்தரவு!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சொத்து மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் உதவியாளரும், துணை ஆட்சியருமான அன்பழகனை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை கோரிப்பாளையம் ஹக்கிம் அஜ்மல்கான் சாலையில் உள்ள அசோதா விலாஸ் பங்களா மற்றும் அதனுடன் இணைந்த தோட்டம், மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் மற்றும் அழகர்கோவிலுக்கு சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்ட அறக்கட்டளையின் நிர்வாகத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 2016-ஆம் ஆண்டு, அப்போதைய மதுரை வடக்கு வட்டாட்சியராக இருந்த அன்பழகன், இந்த சொத்துகளின் உரிமையை முறைகேடாக நீக்கி, சிலரின் பெயரில் சட்டவிரோதமாக பட்டா மாற்றம் செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் அரசன் இடைநீக்கம் செய்யப்பட்டதுடன், அப்போதைய வட்டாட்சியர் அன்பழகன் மீது துறைரீதியான நடவடிக்கை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

இதற்கிடையே, நீதிமன்றத் தடையை மீறி சொத்து தொடர்பாக ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டதாக கூறி, மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையர் செல்லத்துரை அளித்த புகாரின் பேரில் மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்னாள் VAO அரசன், முன்னாள் வட்டாட்சியர் அன்பழகன் உள்ளிட்ட 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ராஜ்குமார், இளையராஜா, காளிகுமார் மற்றும் துணை ஆட்சியர் அன்பழகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், வழக்கில் கைது செய்யப்பட்ட துணை ஆட்சியர் அன்பழகனை பணியிடை நீக்கம் செய்து வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *