அமெரிக்காவில் பணியாற்றி வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப (ஐடி) ஊழியர் ஒருவர், இந்தியாவில் உள்ள முக்கிய நிறுவனங்கள் மற்றும் பிரமுகர்களுக்கு 1,500-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் அனுப்பிய வழக்கில் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த சரத் சுப்பிரமணியன் சங்கர், அமெரிக்காவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். புதன்கிழமை (ஜூலை 22) எதிஹாட் ஏர்வேஸ் விமானம் மூலம் சென்னை வந்தபோது, குடியுரிமை அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர் மீது தமிழகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, தமிழ்நாடு பயங்கரவாதத் தடுப்புப்படை (ATS) அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கடந்த 2023 முதல் 2025 வரை இந்தியாவில் உள்ள வணிக விமானங்கள், பள்ளிகள், கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஓய்வுபெற்ற உளவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்கள் மற்றும் நபர்களுக்கு 1,500-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியிருப்பது உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தன்னை யாரும் கண்டுபிடிக்க முடியாத வகையில் பல்வேறு நவீன இணைய தொழில்நுட்பங்கள் மற்றும் அடையாள மறைவு முறைகளை பயன்படுத்தி மின்னஞ்சல்களை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், ஒரு மிரட்டல் மின்னஞ்சலுக்கு தவறுதலாக தனது சொந்த மின்னஞ்சல் முகவரியில் இருந்து பதில் அனுப்பியதால், அவரது மின்னணு அடையாளத்தை தமிழக காவல்துறை கண்டறிந்தது.
அதன் பின்னர் சுமார் ஆறு மாதங்கள் அவரது செயல்பாடுகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டன. மேலும், தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்ட அவரது விவரங்கள் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், சென்னை விமான நிலையம் வந்தவுடன் சரத் சுப்பிரமணியன் சங்கர் கைது செய்யப்பட்டார். அவரிடம் தமிழ்நாடு பயங்கரவாதத் தடுப்புப்படை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பாதுகாப்பு அமைப்புகளிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.













Leave a Reply