தமிழகத்தில் கள்ளச்சாராய மரணங்கள் மற்றும் போலி மதுபான விற்பனைக்கு எதிராகக் காவல்துறையும், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவும் மாநிலம் தழுவிய அளவில் கடுமையான வேட்டையை நடத்தி வருகின்றன. குறிப்பாக, அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதைத் தடுக்க தீவிரக் கண்காணிப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய இரும்புக்கர நடவடிக்கை ஒருபுறம் நீடித்தாலும், சேலம் மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையாளர்கள் நவீன முறையில் கள்ளச்சந்தையைத் தொடர்ந்து நடத்தி வருவது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் சட்டவிரோத மது விற்பனை தொடர்பான வீடியோ ஒன்றும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் பெண் ஒருவர் மதுபாட்டிலை திறந்து பகிர்ந்து கொடுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
மலையடிவாரம் மற்றும் நகர்ப்புற எல்லைப் பகுதிகளில் அரசு அனுமதித்த நேரத்தைத் தாண்டி, கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் பதுக்கப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முன்பெல்லாம் ரகசிய இடங்களில் மட்டுமே நடந்து வந்த இந்த வியாபாரம், தற்போது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ‘ஜி-பே’போன்ற ஆன்லைன் கியூஆர் கோடு பணப் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி மிகத் துணிச்சலாக டிஜிட்டல் கள்ளச்சந்தையாகவும் உருமாறியுள்ளது.
ஒரு பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட பல மடங்கு கூடுதல் விலைக்கு விற்று சமூக விரோதிகள் கல்லா கட்டி வருகின்றனர். மாநில அரசு தற்போது நுகர்வோர் ஏமாறுவதைத் தடுக்க டாஸ்மாக்கில் ஆன்லைன் புக்கிங் வசதியைக் கொண்டு வந்துள்ள போதிலும், சட்டவிரோத கும்பல்கள் இரவு நேரங்களிலும் மற்றும் டாஸ்மாக் விடுமுறை நாட்களிலும் இதுபோன்ற கள்ள விற்பனையைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன.
இதனால் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் சட்ட ஒழுங்கு சீர்குலைவதோடு, பொதுமக்களுக்கும் பெண்களுக்கும் கடுமையான அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இந்த விவகாரத்தில் சேலம் மாவட்ட காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து, கள்ளச்சந்தையில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்துள்ள போதிலும், இதன் பின்னணியில் உள்ள மொத்த விநியோகச் சங்கிலியையும் அடியோடு வேரறுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் தற்போதைய கோரிக்கையாக உள்ளது.













Leave a Reply