Advertisement

இனி இஷ்டத்திற்கு கதையளந்தால் ஜெயில் தான்! – சமூக வலைத்தள இன்ஃப்ளூயன்சர்களுக்கு செக்

சமூக வலைத்தளங்களில் உணவுப் பொருட்கள் தொடர்பாக தவறான தகவல்களைப் பரப்பும் பிரபலங்கள் மற்றும் இன்ஃப்ளூயன்சர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் (FSSAI) அறிவுறுத்தியுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் சினிமா பிரபலங்கள், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் இன்ஃப்ளூயன்சர்களின் விளம்பரங்களை நம்பி உணவுப் பொருட்களை வாங்கும் நுகர்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனைப் பயன்படுத்தி, ஆதாரமற்ற தகவல்களையும் மிகைப்படுத்தப்பட்ட claims-களையும் விளம்பரங்களில் தெரிவிப்பதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு உணவுப் பொருளை விளம்பரப்படுத்தும் முன், அதில் தெரிவிக்கப்படும் தகவல்கள் உண்மையானவையா, அதற்கான அறிவியல் அல்லது ஆய்வக ஆதாரங்கள் உள்ளனவா, அந்தப் பொருள் FSSAI விதிமுறைகளுக்கு உட்பட்டதா என்பதை விளம்பரப்படுத்துபவர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, “இந்தப் பொருளை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி உடனடியாக அதிகரிக்கும்”, “அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது” போன்ற ஆதாரமற்ற சுகாதாரக் கூற்றுகளை தெரிவிப்பது நுகர்வோரை தவறாக வழிநடத்தும் செயலாக கருதப்படலாம்.

மேலும், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் மற்றும் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறி தவறான விளம்பரங்களை மேற்கொண்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால், இனி ஒரு பிராண்டுடன் இணைந்து உணவுப் பொருளை விளம்பரப்படுத்தும் முன், அதன் தரம் மற்றும் விளம்பரத்தில் கூறப்படும் தகவல்களின் உண்மைத்தன்மையை இன்ஃப்ளூயன்சர்கள் சரிபார்ப்பது அவசியமாகியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் “எதை வேண்டுமானாலும் பேசலாம்” என்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *