தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படவுள்ள முதல் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) ஆகஸ்ட் 5-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் வெளியிட்டுள்ளார். புதிய அரசின் முதல் பட்ஜெட் என்பதால் அரசியல் கட்சிகள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த மாதம் ஆளுநர் உரையுடன் முதல் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தின்போது திமுக மற்றும் தவெக உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. குறிப்பாக முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை விமர்சித்து முதலமைச்சர் விஜய் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு கடந்த இரண்டு வாரங்களாக முதலமைச்சர் விஜய் அனைத்து துறைகளின் அமைச்சர்கள் மற்றும் துறைச் செயலாளர்களுடன் தொடர் ஆலோசனை நடத்தி வருகிறார். ஒவ்வொரு துறையிலும் அறிவிக்கப்பட வேண்டிய புதிய திட்டங்கள், நிலுவையில் உள்ள திட்டங்கள், நிதிநிலை மற்றும் வருவாய் ஆதாரங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை 10 மணிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 6-ஆம் தேதி வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். மேலும், பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு நடைபெறும் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில், மானியக் கோரிக்கைகள் எத்தனை நாட்கள் நடைபெறும், எந்தத் துறையின் மானியக் கோரிக்கை எந்த தேதியில் விவாதிக்கப்படும் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டில் தவெக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகள் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களின் பாதுகாப்பிற்கான “சிங்கப்பெண் படை”, பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெறுமா என்பது குறித்து மக்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
அதேபோல், மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது, இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்குவது, “தாய் மாமன் சீர்” திட்டம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. புதிய அரசின் கொள்கை திசையை வெளிப்படுத்தும் முக்கிய ஆவணமாக இந்த முதல் பட்ஜெட் அமையும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.













Leave a Reply