Advertisement

உதயநிதி ஸ்டாலின் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்; கைது அச்சத்தால் உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு

தமிழகத்தில் காவிரி நீர் உரிமையை நிலைநாட்டுதல், விவசாய பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்தல் மற்றும் டெல்டா விவசாயிகளுக்கு சிறப்பு நிவாரணத் தொகுப்பு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திமுக சார்பில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில், தஞ்சாவூரில் நேற்று (03.08.2026) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய் மற்றும் ஒரு பெண் பொது ஆளுமை குறித்து தனிப்பட்ட முறையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், இரட்டை அர்த்தத்துடன் கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் மாநிலம் முழுவதும் காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு, பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனையடுத்து, சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலினின் இல்லத்தைச் சுற்றி ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, திமுக சட்டப் பிரிவு மற்றும் வழக்கறிஞர்கள் குழு சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி, உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால கைது பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவசர முறையீடு செய்துள்ளனர்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான என். ஆனந்த், தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், “எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பின் மாண்பை உணராமல் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. முதல்வர் பதவியின் தகுதியும் மரபும் கூட புரியாத வகையில் நடந்துகொண்டுள்ளார்” என கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று (04.08.2026) தவெக சார்பில் போராட்டம் நடத்த மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் கூறி, உதயநிதி ஸ்டாலின் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக சார்பில் அதிகாரப்பூர்வ புகார் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தவெகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் பழ. செல்வகுமார் தாக்கல் செய்துள்ள மனுவில், தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஆபாச மற்றும் இரட்டை அர்த்தக் கருத்துகள் பெண்களின் கண்ணியத்தை பாதிப்பதோடு, பொது வாழ்வில் பெண்கள் மீதான மரியாதையை சீர்குலைக்கும் வகையில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த உரையின் முழு வீடியோ மற்றும் பேச்சை தேசிய மகளிர் ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும், உதயநிதி ஸ்டாலினுக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்ப வேண்டும், நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கோர வலியுறுத்த வேண்டும், மேலும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் உரிய பிரிவுகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுத்து வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேசிய மகளிர் ஆணையம் எத்தகைய நடவடிக்கை எடுக்கிறது என்பது அரசியல் மற்றும் சட்ட ரீதியாக முக்கியத்துவம் பெற்றதாகக் கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *