தேனி மாவட்டம் போடி அருகே கள்ளக்காதல் விவகாரம் மற்றும் செல்போன் திருட்டு சந்தேகம் காரணமாக இரண்டு சிறுவர்களை கிணற்றில் தள்ளிக் கொலை செய்ததாகக் கூறப்படும் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போடி அருகே மேல சொக்கநாதபுரம் பேரூராட்சிக்குட்பட்ட ரெங்கநாதபுரம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னத்தம்பியின் மகன்கள் ஸ்ரீஹரிஷ் (11), சபரீஷ் (10). இருவரும் 6 மற்றும் 5-ம் வகுப்பில் படித்து வந்தனர். கடந்த மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த அவர்கள் திடீரென மாயமானதால், குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து சின்னத்தம்பி அளித்த புகாரின் பேரில் போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கினர். அடுத்த நாள் அருகிலுள்ள சுமார் 100 அடி ஆழமுள்ள பாசனக் கிணற்றில் இரு சிறுவர்களின் சடலங்கள் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் உதவியுடன் சடலங்கள் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சின்னத்தம்பியின் உறவினரான கேசவ பாலாஜி (19) சிறுவர்களை அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், தனது தாயாருடன் சின்னத்தம்பிக்கு தகாத உறவு இருந்ததாகவும், மேலும் தனது விலை உயர்ந்த செல்போனை சிறுவர்கள் திருடியதாக சந்தேகமடைந்த ஆத்திரத்தில், இருவரையும் கிணற்றில் தள்ளிக் கொலை செய்ததாகக் கூறியுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து கேசவ பாலாஜியை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இரட்டை சிறுவர் கொலை சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.








Leave a Reply