திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவர், அவரை கழுத்தறுத்துக் கொலை செய்துவிட்டு தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வசித்து வரும் பாபு (35), தனியார் ஹாலோபிளாக் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஸ்ரீதேவி (34). தம்பதியருக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டிருந்த பாபு, அடிக்கடி ஸ்ரீதேவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த ஸ்ரீதேவி, தனது தாய் வீட்டிற்குச் சென்று வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று மாமியார் வீட்டுக்குச் சென்ற பாபு, மனைவியை சமாதானப்படுத்தி மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இரவில் மூன்று குழந்தைகளும் மாடியில் உறங்கிய நிலையில், கணவன்–மனைவி தரைத்தளத்தில் தூங்கியுள்ளனர்.
இன்று காலை கீழே வந்த குழந்தைகள், தாயார் ஸ்ரீதேவி கழுத்தில் ஆழமான காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அலறி அழுதனர். அவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நள்ளிரவில் ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரமடைந்த பாபு, மனைவியை கழுத்தறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது தெரியவந்தது.
இதையடுத்து ஸ்ரீதேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார், தலைமறைவான பாபுவை தீவிரமாக தேடி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது













Leave a Reply