சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அடுத்தடுத்த இரண்டு வீடுகளில் நடைபெற்ற பகல் நேர கொள்ளை சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து தங்க நகைகள், ரொக்கப் பணம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தேவகோட்டை செல்லப்ப செட்டியார் கோயில் அருகே உள்ள கே.வி.ஆர்.எம். தெருவில் வசித்து வரும் குமார் (51), நகைக்கடையில் பணியாற்றி வருகிறார். கடந்த 16-ஆம் தேதி வழக்கம்போல் வேலை முடித்து வீட்டிற்கு திரும்பியபோது, வீட்டின் முன் கேட் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, இரும்பு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 8 பவுன் தங்க நகைகள் மற்றும் 2 செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதேபோல், குமாரின் வீட்டிற்கு எதிரே வசிக்கும் தனியார் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மீனாட்சி (55) என்பவரது வீட்டிலும் கொள்ளை நடைபெற்றது. பள்ளியில் இருந்து மாலை வீடு திரும்பியபோது, வீட்டில் இருந்த ரூ.30 ஆயிரம் ரொக்கப் பணம் திருடப்பட்டிருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இரண்டு சம்பவங்கள் குறித்தும் தேவகோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தேவகோட்டை டிஎஸ்பி கண்ணன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் மார்ட்டின் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில், காரைக்குடி சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (42) மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த விக்னேஷ் (35) ஆகியோர் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 6 பவுன் தங்க நகைகள், ரூ.24,500 ரொக்கப் பணம் மற்றும் கொள்ளைச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கார் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மீதமுள்ள நகைகள் மற்றும் பொருட்களை மீட்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.













Leave a Reply