திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காவல் நிலையம் அருகே இளைஞர் ஒருவரின் கண்களில் மிளகாய் பொடி தூவி, தலையில் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சாலையோரத்தில் கிடந்த அவரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
திருத்தணி ஜெ.ஜெ. ரவி நகர் பகுதியைச் சேர்ந்த தமிழரசன் (32), இருசக்கர வாகன மெக்கானிக்காக பணியாற்றிய நிலையில், கடந்த 20 நாட்களாக தனியார் நிறுவனத்தில் உணவு டெலிவரி பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று இரவு வெளியே சென்ற அவர் வீடு திரும்பாததால், அவரது மனைவி பிரியா உறவினர்களுடன் தேடியுள்ளார்.
இந்நிலையில், திருத்தணி காவல் நிலையம் அருகே கன்னிகாபுரம் சாலையோரத்தில் தலையில் பலத்த வெட்டுக்காயங்களுடன், அருகில் மிளகாய் பொடி சிதறிய நிலையில் தமிழரசன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். தகவலறிந்து வந்த போலீசார் அவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தாக்குதல் முன்விரோதம் காரணமாக நடந்ததா அல்லது நகை, செல்போன் பறிக்கும் நோக்கில் வழிப்பறி கும்பல் மிளகாய் பொடி தூவி தாக்கியதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் திருத்தணி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.













Leave a Reply