கரூர் மாவட்டத்தில் தவெக ஒன்றிய செயலாளர் மீது பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வெளியான தகவல்களை மேற்கோள்காட்டி, “உள்ளூர் தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை அஞ்சுகிறதா? ‘சிங்கப்பெண் பாதுகாப்பு படை’ என்ன செய்து கொண்டிருக்கிறது?” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வேலை முடித்து வீடு திரும்பிய திருமணமான பெண்ணை பின்தொடர்ந்து பாலியல் ரீதியாக சீண்டியதாக தவெக ஒன்றிய செயலாளர் ரமேஷ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அந்த நபரை பொதுமக்களே பிடித்து தாக்கிய பின்னர் போலீசில் ஒப்படைத்ததாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டுவதாகவும், இது காவல்துறையின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
“‘தவெகக்காரன்’ என்ற அடைமொழி குற்றங்கள் செய்வதற்கான அடையாள அட்டையாக மாறி வருகிறதா? உள்ளூர் தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை அஞ்சுகிறதா? பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் பாதுகாப்பு படை என்ன செய்து கொண்டிருக்கிறது?” எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவெக தலைவர் விஜய் தனது கட்சி நிர்வாகிகள் மீது உரிய கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.













Leave a Reply