Advertisement

கட்சி பதவி தருவதாக ஆசை வார்த்தை; இன்ஸ்டா வீடியோ கால் மூலம் மிரட்டி ஆபாச காட்சிகள் பதிவு செய்ததாக தவெக நிர்வாகி மீது பெண் புகார்

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு, கட்சியில் மகளிர் அணிப் பொறுப்பு வழங்குவதாக கூறி இன்ஸ்டாகிராம் வீடியோ கால் மூலம் மிரட்டி ஆபாச காட்சிகளை பதிவு செய்ததாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் விஜய்மோகன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மாசாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 34 வயதான பெண், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் டிஜிபி அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தவெகவில் இணைவதற்காக விஜய்மோகனை தொலைபேசியில் தொடர்புகொண்டதாக தெரிவித்துள்ளார். அப்போது, மகளிர் அணியில் பொறுப்பு வேண்டும் என்று கேட்டபோது, பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அவர் உறுதியளித்ததாக கூறியுள்ளார்.

இதையடுத்து இருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு தொடர்ந்ததாகவும், பின்னர் “கட்சியில் பதவி எளிதாக கிடைக்காது; உனக்காக நான் முயற்சி செய்கிறேன்” என்று கூறி தனிப்பட்ட முறையில் பேசத் தொடங்கியதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வீடியோ கால் செய்யும்படி வற்புறுத்திய அவர், முதலில் சாதாரணமாக பேசிய பின்னர் தனிப்பட்ட மற்றும் ஒழுங்கற்ற கோரிக்கைகளை முன்வைத்ததாகவும், அதை மறுத்தபோது “கட்சி பதவி வேண்டுமா?” என்று மீண்டும் அழுத்தம் கொடுத்ததாகவும் பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

அதன்பிறகு, பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வீடியோ கால் செய்தபோது, அதனை ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்து வைத்துக் கொண்டு, மேலும் தனிப்பட்ட காட்சிகளை அனுப்புமாறு மிரட்டியதாகவும், மறுத்தால் அந்த பதிவுகளை வெளியிடுவதாக அச்சுறுத்தியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *