திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சண்முக விலாச மண்டபம் முன்பாக அமைக்கப்பட்டுள்ள இரும்பு கிரில் கேட்டை அகற்ற வலியுறுத்தி ஜூலை 22-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த அறவழி ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் சண்முக விலாச மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு கிரில் கேட்டை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தனது தலைமையில் ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் அறவழி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி, கோயிலில் நேரில் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என்றும், பத்து நாட்களுக்குள் கிரில் கேட் அகற்றுவது மற்றும் உள்ளூர் மக்களுக்கு அடையாள அட்டை வழங்கி தரிசன நேர ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து உரிய முடிவு எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோளை ஏற்று, அறிவிக்கப்பட்டிருந்த அறவழி ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகவும் அனிதா ராதாகிருஷ்ணன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் விளாத்திக்குளம் தொகுதி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணனும் பங்கேற்றிருந்தார்.
அனிதா ராதாகிருஷ்ணன் போராட்டத்தை ஒத்திவைத்தது தொடர்பாக பல்வேறு அரசியல் கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தன் மீதும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாகவே போராட்டம் ஒத்திவைக்கப்பட்டிருக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. எனினும், இந்தக் காரணம் குறித்து அனிதா ராதாகிருஷ்ணன் அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.













Leave a Reply