Advertisement

பழனி நில மோசடி: போலி உயிலால் தனியார் நிலம் அபகரிப்பு; சார்பதிவாளர் ஜஸ்டின் மீது வழக்கு!

பழனி அருகே ஆயக்குடியில் தனியார் நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த வழக்கில், நிலத்தை விற்ற கோவையைச் சேர்ந்த மணி என்பவரைப் போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே 100 கோடி கோயில் நில மோசடி வழக்கில் சிபிசிஐடி விசாரணையில் உள்ள சஸ்பெண்ட் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உள்பட 3 பேர் மீது 6 பிரிவுகளில் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போலி ஆவணங்கள் மூலம் நிலங்களை முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த விவகாரங்கள் தொடர் பூதாகரமாக வெடித்து வருகின்றன. இந்நிலையில், பழனி அருகே ஆயக்குடி பகுதியில் உள்ள தனியார் நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்ததாகப் புதிய முறைகேடு வெளிச்சத்திற்கு வந்தது. ஆரம்பத்தில் இந்த நிலம் கோயில் அல்லது மடத்து நிலம் எனத் தகவல்கள் பரவிய நிலையில், பின் அது ‘தனியார் நிலம்’ என்பது பத்திரப்பதிவுத் துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.

பழனியில் 100 கோடி மதிப்பிலான கோயில் நிலத்தைப் பத்திரப்பதிவு செய்து கொடுத்த விவகாரத்தில் ஏற்கனவே பணி இடைநீக்கம் (Suspension) செய்யப்பட்டு, தற்போது சிபிசிஐடி (CBCID) தீவிர விசாரணையில் உள்ள பழனி முன்னாள் இணைச் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனே, இந்த ஆயக்குடி தனியார் நிலத்தையும் போலி உயில் ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பதிவு செய்து கொடுத்துள்ளார். இந்தச் சட்டவிரோதப் பத்திரப்பதிவு குறித்துப் பழனி தற்போதைய சார்பதிவாளர் ஈஸ்வரி அவர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து  விசாரணை நடத்திய ஆயக்குடி  காவல் துறையினர், கோவையில் இறந்துபோன நபர்களின் போலி உயில் சாசனங்களைக் காட்டி நிலத்தை முறைகேடாக விற்ற மணி (எ) மன்னார்சாமி என்பவரை  கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மணி மற்றும் ஏற்கனவே சிபிசிஐடி விசாரணையில் உள்ள சஸ்பெண்ட் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை வாங்கிய கந்தசாமி ஆகிய 3 பேர் மீது,

​BNS 336(2): போலி ஆவணம் தயாரித்தல் (Forgery)

​BNS 337: அரசு பதிவு / பொது ஆவணங்களைப் போலியாக்குதல்

​BNS 338: உயில் (Will) போன்ற முக்கியச் சொத்து ஆவணங்களைப் போலியாக உருவாக்குதல்

​BNS 336(3): ஏமாற்றும் நோக்கத்துடன் போலி ஆவணம் தயாரித்தல்

​BNS 340(2): போலி ஆவணத்தை உண்மையான ஆவணம் போலப் பயன்படுத்துதல்

​BNS 318(4): ஏமாற்றிப் பணம் மற்றும் சொத்தைப் பெறுதல் (Cheating) ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *