ராணிப்பேட்டை மாவட்டத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரின் பேரில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் விஜய்மோகன் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு பகுதியைச் சேர்ந்த 34 வயது இளம்பெண், கடந்த 23-ஆம் தேதி ஆற்காடு டவுன் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், சுமார் 10 மாதங்களுக்கு முன்பு தவெகவில் இணைய விரும்பி மாவட்ட செயலாளர் விஜய்மோகனை தொலைபேசியில் தொடர்புகொண்டதாக தெரிவித்துள்ளார். அப்போது, கட்சிப் பதவி பெற்றுத் தருவதாக கூறி தன்னுடன் நெருக்கமாக பழகத் தொடங்கிய அவர், பின்னர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும், இன்ஸ்டாகிராம் மூலம் ஆடையின்றி வீடியோ அனுப்புமாறு வற்புறுத்தியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தனது ஆபாச வீடியோக்களை பதிவு செய்து வைத்துக்கொண்டு மிரட்டியதாகவும், இதுகுறித்து ராணிப்பேட்டை எம்எல்ஏ தாஹிராவிடம் புகார் தெரிவித்தபோதும், வீடியோக்களை நீக்குவதாக கூறிய விஜய்மோகன் அதனை செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார். “நான் ஆளுங்கட்சி மாவட்ட செயலாளர், என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது” என்று கூறி தன்னை மிரட்டியதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், தனியார் தொலைக்காட்சி நிருபர் ஜான் பிரிட்டோ என்பவரும் தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததாகவும், அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளம்பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், விஜய்மோகன் மற்றும் ஜான் பிரிட்டோ மீது பெண்களுக்கு பாலியல் தொல்லை, பெண்ணை நிர்வாணமாக இருக்க கட்டாயப்படுத்துதல், பெண்ணின் அந்தரங்கத்தை படம் பிடித்தல் மற்றும் கிரிமினல் மிரட்டல் உள்ளிட்ட இந்திய நீதிச் சட்டம் (BNS) பிரிவுகள் 75, 76, 77 மற்றும் 351(2)-ன் கீழ் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வழக்கு தொடர்பாக இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.













Leave a Reply