உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலயத்தின் 444-வது ஆண்டு திருவிழா இன்று கொடியேற்ற நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னையை தரிசித்து வழிபட்டனர்.
திருவிழாவையொட்டி இன்று அதிகாலை முதல் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. தொடர்ந்து தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலிக்குப் பின்னர், பனிமயமாதா திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடி பேராலயம் முன்புள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. கொடியேற்றத்தின்போது பக்தர்கள் “மரியே வாழ்க” என முழக்கமிட்டு பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.
விழாவை முன்னிட்டு பனிமய அன்னைக்கு பொன்மகுடம் அணிவிக்கப்பட்டது. உலக அமைதியை வேண்டி 100 புறாக்களும் பலூன்களும் பறக்கவிடப்பட்டன. மேலும் பழைய துறைமுகத்தில் இருந்து இழுவைக் கப்பலின் சைரன் ஒலிக்கப்பட்டு திருவிழா தொடக்கம் அறிவிக்கப்பட்டது.
நேர்த்திக்கடனாக பக்தர்கள் நிறைகுடம் பால், வாழைத்தார், பள்ளி மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் உள்ளிட்டவற்றை கொடிமரம் முன்பு வைத்து வழிபட்டனர். திருமண வரம் மற்றும் குழந்தை வரம் வேண்டி பெண்கள் மாதுளை பழங்களை அன்னையின் திருவுருவம் முன்பு வைத்து ஆசி பெற்று எடுத்துச் சென்றனர். சிறு குழந்தைகளை கொடிமரம் முன்பு அமர வைத்து சிறப்பு பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டன.
ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 5 வரை நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் சிறப்பு திருப்பலி, ஜெபமாலை, மறையுரை மற்றும் நற்கருணை ஆராதனை நடைபெறவுள்ளது. ஆகஸ்ட் 5-ஆம் தேதி பனிமயமாதா திருவுருவ தேர்பவனி நடைபெறுகிறது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.













Leave a Reply