தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில், கருப்பட்டியில் சர்க்கரை கலந்து விற்பனை செய்ததுடன், ஜிஎஸ்டி வரி ஏய்ப்பிலும் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட 5 வணிகர்களுக்கு மொத்தம் ரூ.38 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த மோசடி நடைபெற்று வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உடன்குடி பகுதியில் தமிழ்நாட்டிலேயே அதிகளவில் சர்க்கரை மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். விசாரணையில், கடந்த சில வாரங்களில் மட்டும் ரூ.5 கோடி மதிப்பிலான சர்க்கரை மூட்டைகள் வாங்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
மேலும், பனை பதநீரில் 60 முதல் 70 சதவீதம் வரை சர்க்கரை கலந்து கருப்பட்டி தயாரித்து, அதை இயற்கை கருப்பட்டி எனக் கூறி சந்தையில் விற்பனை செய்து வந்ததும் அதிகாரிகளின் ஆய்வில் கண்டறியப்பட்டது. இந்த முறைகேடு கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.
சர்க்கரை கலந்து தயாரிக்கப்பட்ட கருப்பட்டிக்கு 18 சதவீத ஜிஎஸ்டி செலுத்த வேண்டிய நிலையில், 5 சதவீத ஜிஎஸ்டி மட்டுமே செலுத்தி சுமார் ரூ.6 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட 5 வணிகர்களுக்கு மொத்தம் ரூ.38 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உடன்குடி கருப்பட்டி அதன் தனித்துவமான மணம் மற்றும் சுவைக்காக நாடு முழுவதும் புகழ்பெற்றது. இந்த தயாரிப்புக்கு புவிசார் குறியீடு (GI Tag) வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் உள்ள 5.19 கோடிக்கும் மேற்பட்ட பனை மரங்களில், சுமார் ஒரு கோடி பனை மரங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளன. மாநிலத்தில் உற்பத்தியாகும் பனைப் பொருட்களில் சுமார் 90 சதவீதம் தூத்துக்குடி மாவட்டத்தின் பங்களிப்பாகும்.
இந்நிலையில், உடன்குடி கருப்பட்டியின் தரத்தையும், நுகர்வோர் நம்பிக்கையையும் பாதிக்கும் வகையில் நடைபெற்ற இந்த மோசடி உணவுப் பாதுகாப்பு மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பாக பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது தொடர்ந்து சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.













Leave a Reply