Advertisement

வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் திட்டம் செயல்படுத்தப்படும்” – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், த.வெ.க. அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டை வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் இன்று (06.05.2026) காலை 09.30 மணியளவில் தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியானது. அதன்படி, “ரூ.11 இலட்சம் மதிப்பீட்டில் 5 விவசாயிகளுக்கு சிறந்த உயிர்ம விவசாயிக்கான நம்மாழ்வார் விருது வழங்கப்படும். ரூ. 27.82 கோடி மதிப்பீட்டில் விவசாயிகளின் அனைத்து தேவைகளுக்கும் ஒரே முகவரியாக 8 புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் அமைக்கப்படும்.

ரூ. 3 கோடி மதிப்பீட்டில் வேளாண் கண்காட்சி – தொழில்நுட்பமும் பாரம்பரியமும் சங்கமிக்கும் திருவிழா நடத்தப்படும். ரூ. 3.56 கோடி மதிப்பீட்டில் திரவ உயிர் உர உற்பத்தி மையங்களின் கட்டமைப்பு மேம்படுத்தப்படும். ரூ. 7.1 கோடி மதிப்பீட்டில் விதை சுத்திகரிப்புத் திறனை அதிகரிக்க 3 புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். ரூ. 9.36 கோடி மதிப்பீட்டில் 17 ஆயிரத்து 315 ஏக்கருக்கு விதைக்கரும்பு மானியம் வழங்கப்படும். ரூ.9 கோடி மதிப்பீட்டில் கரும்பு சாகுபடிப் பரப்பை அதிகரிக்கக் கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

ரூ. 2 கோடி மதிப்பீட்டில் பனை விதைகள், பனங்கன்றுகள் விநியோகம், பயிற்சி அளித்தல் மற்றும் பனைபொருள் உற்பத்திக் கூடாரங்கள் அமைக்கப்படும். ரூ. 10 கோடி மதிப்பீட்டில் ‘வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்’ செயல்படுத்தப்படும். இதன் மூலம் மாடித்தோட்டம் அமைக்க இடுபொருள் தொகுப்புகள், காய்கறி விதைத் தொகுப்புகள், பழச்செடித் தொகுப்புகள், நீரியல் தோட்டம், செங்குத்துத் தோட்டம், நிழல்வலைக் குடில்கள் ஏற்படுத்த வழிவகை செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *