Advertisement

40 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் சந்தித்த முன்னாள் மாணவர்கள்!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வரும் பழமை வாய்ந்த அரசு முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியில் 1987–90 ஆம் ஆண்டு கல்வியாண்டில் கணினி, மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பயின்ற முன்னாள் மாணவர்கள், 120 பேர் 40 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கல்லூரிக்கு சுவடுகளை தேடி என குடும்பத்தினருடன் ஒன்றுகூடி பழைய நினைவுகளைப் பகிர்ந்து மகிழ்ந்தனர்.

அக்காலகட்டத்தில் பயின்ற சுமார் 120 மாணவர்களில் சிலர் தற்போது அரசு மற்றும் தனியார் துறைகளில் உயர்பதவிகளில் பணியாற்றி வருகின்றனர். அதில் தெழில் வல்லுநர்கள், தொழிலதிபர்களாகவும் உள்ளனர். தங்களை உருவாக்கிய கல்வி நிலையத்தில் மீண்டும் சுவடுகளை தேடி என ஒன்று கூட வேண்டும் என்ற எண்ணத்தில் முன்னாள் மாணவர்கள் ஜெய்சங்கர், கமலக்கண்ணன், அன்புசுடர், ரமேஷ்குமார், யாசின், மதன்ராஜ், அருள்பிரகாசம், பாலசுப்பிரமணியன், சரவணன், ராஜேஸ்வரி, சிவானந்தம், விஜயலட்சுமி உள்ளிட்டோரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் 60-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றனர். இதில் 20 முன்னாள் மாணவிகளும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அனைவரும் தங்களது குடும்ப உறுப்பினர்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டு, கல்லூரி கால நினைவுகள், நட்பு, மாணவ வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து மகிழ்ந்தனர். மேலும், தாங்கள் கற்ற தொழில்நுட்பக் கல்வியே இன்று எவ்வளவு புதிய தொழில்நுட்பங்கள் வந்தாலும் தங்களது வாழ்க்கைக்கும் தொழிலுக்கும் வலுவான அடித்தளமாக அமைந்துள்ளதாக தெரிவித்தனர்.

இதனைதொடர்ந்து அப்போது கல்வி கற்பித்த பேராசிரியர்கள், தற்போதுள்ள கல்லூரி முதல்வர், பேராசிரியர்களை கௌரவித்தனர். மேலும் தற்போதைய மாணவர்களிடம் கடின உழைப்பு, தொழில்நுட்பத் திறன் மற்றும் தொடர்ச்சியான கற்றலின் அவசியத்தையும் எடுத்துரைத்தனர். இதனைத் தொடர்ந்து, தற்போது கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களின் திறமைகளைப் பாராட்டி கேடயங்கள் வழங்கி வாழ்த்தினர்.

மேலும், கல்லூரியின் வளர்ச்சிக்காக 3 முன்னாள் மாணவர்கள் ஆண்டுதோறும் தலா ரூ.5 லட்சம் என 15 லட்சம் நிதி வழங்க உறுதியளித்தனர். மேலும் கல்லூரி வளர்சிக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக கூறினர்.நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அருமைநாயகன், பேராசிரியர்கள் ராஜன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, 40 ஆண்டுகளுக்குப் பிறகும் தாங்கள் கல்வி கற்ற கல்லூரியை மறக்காமல் குடும்பத்துடன் வந்து, தற்போதைய மாணவர்களை ஊக்குவித்து கல்லூரி வளர்ச்சிக்காக உதவ முன்வந்திருப்பது பாராட்டத்தக்க செயலாகும் என்று வாழ்த்தினர். இதே கல்லூரியில் இவர்களுக்கு ஜூனியராக தற்போது தமிழக வீட்டுவசதி துறை அமைச்சராக உள்ள ராஜ்குமார் கல்வி பயின்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *