Advertisement

ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பாதிக்கும் நபர்களின் எண்ணிக்கை ஐந்தே ஆண்டுகளில் பல மடங்கு உயர்வு

2025-26 மதிப்பீட்டு ஆண்டில் ஆண்டுக்கு ரூ.100 கோடி மற்றும் அதற்கு மேல் வருமானம் ஈட்டி வருமான வரி தாக்கல் செய்துள்ள தனிநபர்களின் எண்ணிக்கை 576-ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவலை ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் உயர் வருவாய் ஈட்டும் இந்த பிரிவினரின் எண்ணிக்கை நான்கு மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வருமான வரிச் சட்டத்தின் கீழ் ‘பில்லியனர்’ என்ற சொல்லுக்குச் சட்டப்பூர்வ வரையறை எதுவும் இல்லை என நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி அதிகாரப்பூர்வமாக சமர்ப்பித்த அறிக்கையில், மதிப்பீட்டு ஆண்டு 2025-26 -ல் 576 தனிநபர்கள் தங்களின் ஆண்டு மொத்த வருமானம் ரூ.100 கோடி அல்லது அதற்கு மேல் இருப்பதாக வருமான வரித் தாக்கலில் (ITR) தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.100 கோடிக்கும் மேல் சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை 300% அதிகரித்துள்ளது.

நாட்டில் பில்லியனர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா என்பது குறித்த கேள்விக்கு, மத்திய நிதியமைச்சகத்தின் இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றிருந்தன. 5 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2021-22 ஆம் மதிப்பீட்டு ஆண்டில், குறைந்தது ரூ.100 கோடி ஆண்டு வருமானம் கொண்டதாக 142 வரி செலுத்துவோர் மட்டுமே தெரிவித்திருந்தனர்.

தற்போதைய இந்த எண்ணிக்கையானது 576-ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையானது ஒரு வருடத்தில் ஈட்டப்பட்ட ஆண்டு வருமானத்தை மட்டுமே குறிக்கிறது; அவர்களின் மொத்த சொத்து மதிப்பை குறிக்காது. ஆயிரக்கணக்கான கோடி சொத்து உள்ள ஒருவரின் ஆண்டு வருமானம் ரூ. 100 கோடிக்கு குறைவாக இருந்தால் அவர் இந்த பட்டியலில் வரமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *