Advertisement

சுற்றுலா சென்ற நீட் மாணவி மீது கூட்டு பாலியல் வன்கொடுமை; 2 பேரிடம் தீவிர விசாரணை

உத்தரப் பிரதேச மாநிலம் சித்ரகூட்டில் சுற்றுலா சென்ற 19 வயது நீட் தேர்வு மாணவி மீது மூன்று பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி, ராஜஸ்தானின் கோட்டா நகரில் தங்கி நீட் தேர்வுக்காக தயாராகி வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சித்ரகூட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் தனது 17 வயது ஆண் நண்பருடன் தேவங்கனா பள்ளத்தாக்கு பகுதிக்குச் சென்றுள்ளார்.

அப்போது, இருவரையும் பின்தொடர்ந்த மூன்று பேர் கொண்ட கும்பல் காட்டுப்பகுதியில் வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. ஆண் நண்பரை தாக்கிய பின்னர், மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதுடன், பணம் கேட்டு மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் மாணவியை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பாதிக்கப்பட்டவரின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், கூடுதல் எஸ்.பி. மற்றும் சைபர் செல் அதிகாரிகள் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *