Advertisement

மயிலாடுதுறையில் 32 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: மாவட்ட காவல் துறை அதிரடி நடவடிக்கை! 

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட இருவர் மற்றும் பாலியல் வழக்கில் கைதான நபர் என மூன்று பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் காவல் சரகத்திற்குட்பட்ட கீழையூர் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் சட்டவிரோதமாக கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கடந்த 11.07.2026 அன்று காவல் துறையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பாகசாலை பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகன் கபிலன் (29) என்பவரைக் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தியதோடு, அவரிடமிருந்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். 

அதேபோல், கடந்த 13.07.2026 அன்று மணக்குடி பேருந்து நிலையம் அருகில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மயிலாடுதுறை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான திருவிழந்தூர் பாபு என்பவரின் மகன் சூர்யா (26) என்பவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். 

மேலும், குத்தாலம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், கடந்த 08.06.2026 அன்று மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான குத்தாலம், கட்டளைச்சேரி, தோப்புத் தெருவைச் சேர்ந்த சீமான் என்பவரின் மகன் மகேந்திரன் (47) என்பவர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட கபிலன், சூர்யா மற்றும் மகேந்திரன் ஆகிய மூவரின் தொடர் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் B.சினேகா பிரியா, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தார். மாவட்ட எஸ்பியின் பரிந்துரையை ஏற்று, ஆட்சியர் 14.08.2026 அன்று மூவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின்படி, 15.08.2026 அன்று செம்பனார்கோவில் காவல் ஆய்வாளர் சிவாடவேல் மற்றும் போலீசார் கஞ்சா வழக்கில் கைதான கபிலன் மற்றும் சூர்யா ஆகிய இருவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அதேபோல், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் வனிதா மற்றும் காவல்துறையினர் பாலியல் வழக்கில் கைதான மகேந்திரனை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் (2026) இதுவரை கொலை குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 5 நபர்கள், பொது அமைதிக்குக் பங்கம் விளைவித்த 8 நபர்கள், மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட 6 நபர்கள், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 11 நபர்கள் மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 2 நபர்கள் என மொத்தம் 32 நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்களின் செயல்பாடுகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் ரவுடிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர், கஞ்சா, தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை தொடரும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

இந்த உத்தரவின்படி, 15.08.2026 அன்று செம்பனார்கோவில் காவல் ஆய்வாளர் சிவாடவேல் மற்றும் போலீசார் கஞ்சா வழக்கில் கைதான கபிலன் மற்றும் சூர்யா ஆகிய இருவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அதேபோல், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் வனிதா மற்றும் காவல்துறையினர் பாலியல் வழக்கில் கைதான மகேந்திரனை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *