உடல்நலக் குறைவு மற்றும் மகளின் சிகிச்சைக்காக விடுமுறை எடுத்த பெண் சாப்ட்வேர் இன்ஜினியர் பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறி, தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மீது போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த பாவனா என்ற பெண், தனது உடல்நலப் பிரச்சினைக்காக சுமார் இரண்டு வாரங்கள் மருத்துவ விடுமுறை எடுத்திருந்தார். அந்த காலகட்டத்தில் கூட பணிக்குத் திரும்புமாறு நிறுவன நிர்வாகம் தொடர்ந்து மின்னஞ்சல்கள் அனுப்பி அழுத்தம் கொடுத்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையடுத்து, உடல்நிலை பாதிக்கப்பட்ட தனது மகளை கவனிப்பதற்காக மேலும் 3 நாட்கள் விடுமுறை கேட்டபோது, உரிய காரணமின்றி திடீரென பணியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அலுவலகத்தில் கழிவறைக்குச் செல்வதற்குக் கூட முன் அனுமதி பெற வேண்டிய கட்டுப்பாடுகள் இருந்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நடவடிக்கையை கண்டித்து மேட்சல் பகுதியில் உள்ள நிறுவன அலுவலகம் முன்பு பாவனா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர், சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்து, உரிய விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
“பெண் ஊழியர்களுக்கு குடும்பப் பொறுப்புகளும் உள்ளன. அவர்களிடம் நிறுவனங்கள் மனிதநேயத்துடனும் புரிதலுடனும் நடந்து கொள்ள வேண்டும்” என்று பாவனா வலியுறுத்தினார்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியிடாத நிலையில், போலீசார் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Leave a Reply