Advertisement

“இவர்களை வைத்து கூட்டத்தைக் எப்படி கூட்ட முடியும்?” – அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு!

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு – கர்நாடகா இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. காவிரி நீரை திறந்துவிட முடியாது எனவும் மேகதாதுவில் அணைக் கட்டியே தீருவோம் என கர்நாடகா அரசு திட்டவட்டமாக தொடர்ந்து கூறி வருகிறது. இதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஆனால் தமிழகத்தை ஆளும் தவெக அரசு, கர்நாடகா அரசுக்கு கண்டனம் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறது. இதற்கிடையில், நடப்பாண்டுக்கான உரிய நீர் கிடைக்குமா? என தமிழக மக்களும் தமிழக விவசாயிகளும் எதிர்பார்ப்பில் கவலையில் இருந்து வருகின்றனர். இதனால் காவிரி நீரை நம்பியே இருக்கும் தமிழக மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 45வது ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூலை 30ஆம் தேதி காணொளி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில், காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்று தமிழ்நாட்டுக்கு கர்நாடகா அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி காவிரியில் இருந்து அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு 3,500 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ஏற்று தற்போது வரை கர்நாடகா அரசு தமிழகத்துக்கு நீரை திறந்துவிடாமல் அடாவடி காட்டி வருகிறது. இந்த விவகாரத்தால் தமிழ்நாடு – கர்நாடகாவுக்கு இடையே மீண்டும் மோதல் எழுந்துள்ளது.

இந்த நிலையில், காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிட உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வரும் 3ஆம் தேதி வழக்கு தொடரப்படும் என சட்டத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று (01-08-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், “காவிரி விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் நமக்கு 3,500 கன அடி திறந்துவிட சொல்லிருக்கிறது. 23ஆம் தேதியில் இருந்து திறந்து விடப்பட்டிருக்க வேண்டும், ஆனால் எதுவும் செய்யவில்லை. கர்நாடகா முதல்வரும் தமிழகத்துக்கு எதிராக பேசி வருகிறார். இந்த நேரத்தில் வரும் திங்கட்கிழமை (03-08-26) தமிழக அரசு சார்பாக முதல்வர் கொடுத்த அறிவுரையின் பேரில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. கண்டிப்பாக அனைவரும் அதற்கான அனைத்து ஆலோசனைகளையும் முடித்துவிட்டு முதல்வருடைய ஒப்புதலின் பெயரில் வருகிற திங்க்கிழமை இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது.

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் விடக்கூடாது என கர்நாடகாவில் இருக்கிற எல்லா கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். ஆனால், இங்கே இருக்கிற கட்சிகளுக்கு, எதாவது ஒரு வகையில் தமிழக அரசு எந்த விதத்திலும் தண்ணீரை கொண்டு வரக்கூடாது என்று வேலை பார்க்கிறார்கள். சட்டசபையில் இருந்த வரைக்கும் அனைவரும் சேர்ந்து அந்த தீர்மானத்தை நிறைவேற்றினோம். ஆனால், அடுத்த இரண்டு நாட்களுக்கு பிறகு அதிமுகவிக்கு எங்கே இருந்து திடீரென ஞானம் வந்தது என தெரியவில்லை. இரண்டு நாள் கழித்து அந்த தீர்மானத்தை எதிர்த்தார்கள். அதற்கு எதிராக இப்போது உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்கிறார்கள். 

இன்னும் சொல்லப்போனால் அந்த தீர்மானத்தை கொண்டு வந்ததே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தான். இரண்டு நாள் கழித்து அந்த தீர்மானம் நிறைவேற்றப்படும் போது, நாங்கள் கொடுத்தோம், நீங்கள் வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம் என்கிறார். அதனால் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். அவர்களுடைய மொத்த குறிக்கோள் எந்த வகையிலாவது முதல்வர் இதற்கு சுமூகமான தீர்வை கொண்டு வந்துவிடுவாரோ என்ற பயத்தில் தமிழகத்தில் இருக்கிற கட்சிகள் அனைத்தும் பா.ஜ.கவுடன் சேர்ந்து தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். இவர்களை வைத்து ஒத்த கருத்துடன் எப்படி அனைத்துக் கட்சி கூட்ட முடியும். நமக்கான தேவை நீரை பெறுவது தான். அதற்கு தேவையான அனைத்து வழிவகைகளையும் முதல்வர் செய்து வருகிறார்” என்று பேசினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *