Advertisement

மதுரை அருகே அரசு, ஆம்னி பேருந்துகள் மோதல்: 5 பேர் உயிரிழப்பு; 41 பேர் காயம்

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அரசு பேருந்தும், தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 41 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போலீஸார் தெரிவித்ததாவது:

சென்னையிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் நோக்கி பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. அதிகாலை மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகேயுள்ள வஞ்சிநகரம் நான்கு வழிச்சாலையில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த மையத் தடுப்பில் மோதியது.

இதன் தாக்கத்தால் எதிர்புற சாலைக்குள் நுழைந்த ஆம்னி பேருந்து, மதுரையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதியது. மோதலின் வேகத்தில் ஆம்னி பேருந்து சாலையோரம் தூக்கி வீசப்பட்டு, வஞ்சிநகரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பயணிகள் நிழற்குடையின் மீது மோதி நின்றது. இதில் நிழற்குடை முற்றிலும் சேதமடைந்தது.

இந்த விபத்தில் பெண் ஒருவர் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 41 பேர் காயமடைந்தனர். தகவலறிந்த கொட்டாம்பட்டி போலீஸார், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருடன் இணைந்து காயமடைந்தவர்களை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், பலத்த காயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து நடைபெற்ற இடத்தை சரக டிஐஜி அபினவ் குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். சேதமடைந்த பேருந்துகள் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியது.

இந்த விபத்து தொடர்பாக கொட்டாம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *