Advertisement

ஆளுநர்–அதிகாரிகள் சந்திப்பு சர்ச்சை: அமைச்சர் நிர்மல் குமார் கருத்துக்கு எதிராக புதிய கேள்விகள்

மதுரை: “ஆளுநருக்கு எந்த நிர்வாக அதிகாரமும் இல்லை; அரசு திட்டங்களை ஆய்வு செய்ய அவருக்கு உரிமை கிடையாது. தவெக அரசு அதை ஒருபோதும் அனுமதிக்காது” என்று அமைச்சர் சிடிஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ள நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் ஆளுநரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியது தொடர்பாக அரசியல் வட்டாரங்களில் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

மதுரைக்கு வந்திருந்த ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், சவுராஷ்டிரா கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்றதைத் தொடர்ந்து, அரசினர் விருந்தினர் மாளிகையில் மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகர காவல் ஆணையாளர் எஸ். ராஜேந்திரன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் ஆகியோருடன் சுமார் 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது.

இந்த சந்திப்பில் என்ன விவாதிக்கப்பட்டது என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தியபோதும் இதேபோன்ற எதிர்ப்புகள் எழுந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட விளக்கத்தில், ஆளுநரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மரியாதை நிமித்தமாக மட்டுமே சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், ஆளுநர் மதுரை விமான நிலையம் வந்தபோதே மாவட்ட ஆட்சியர் அவரை வரவேற்று மரியாதை செலுத்தியிருந்த நிலையில், பின்னர் மீண்டும் விருந்தினர் மாளிகையில் தனியாகச் சென்று அதிகாரிகள் சந்தித்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து இன்று நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் சிடிஆர். நிர்மல் குமார், “எந்த அதிகாரமும் இல்லாத ஆளுநர் அரசு திட்டங்களை ஆய்வு செய்ய உரிமை இல்லை. தவெக அரசு அதனை அனுமதிக்காது” என்று தெரிவித்தார்.

இதையடுத்து, “அரசின் நிலைப்பாடு அதுவாக இருந்தால், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் யாருடைய அனுமதியின் பேரில் ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்?” என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

இதுகுறித்து சில அதிகாரிகள் கூறியதாக வெளியாகியுள்ள தகவலின்படி, ஆளுநரின் வருகையையொட்டி முதலில் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும், இந்த தகவல் வெளியாகி சர்ச்சை ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டு, ஆட்சியர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் மட்டும் ஆளுநரை சந்தித்து மதுரையின் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், தலைமைச் செயலகத்தின் ஒப்புதல் இல்லாமல் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆளுநரை சந்திப்பது சாத்தியமில்லை என்றும், இந்த விவகாரத்தில் அரசின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பது குறித்து அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் தொடர்ந்து விவாதம் நிலவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *