தூத்துக்குடி: திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும் ஒருமையிலும் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கடந்த 20ஆம் தேதி திருச்செந்தூரில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையிலும் அவதூறாகவும் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, தமிழக வெற்றிக் கழக (தவெக) நகரச் செயலாளர் செல்வம் அளித்த புகாரின் அடிப்படையில், ஆத்தூர் காவல்துறையினர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், அந்த மனுவை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு ஆய்வுப் பணிக்காக சென்றிருந்த அனிதா ராதாகிருஷ்ணனை, ஆறுமுகனேரி காவல் நிலைய ஆய்வாளர் ரெனிஸ் தலைமையிலான போலீசார் அங்கிருந்தபடியே கைது செய்தனர்.
இந்த கைது சம்பவம் தூத்துக்குடி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.













Leave a Reply