புதுடெல்லி: ஜப்பான் பிரதமர் சனாயே டகாய்ச்சி மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள நிலையில், இந்தியா–ஜப்பான் இடையிலான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் நடைபெற்ற 16-வது இந்தியா–ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் சனாயே டகாய்ச்சி கலந்துகொண்டனர். மாநாட்டைத் தொடர்ந்து இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தனர்.
அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தற்போதைய உலகச் சூழலில் இந்தியா–ஜப்பான் உறவின் முக்கிய தூணாக அதிநவீன தொழில்நுட்பக் கூட்டாண்மை உருவெடுத்துள்ளதாகக் கூறினார். பாதுகாப்பு, செமிகண்டக்டர்கள், குவாண்டம் தொழில்நுட்பம், பசுமை ஆற்றல் மற்றும் பாதுகாப்பான விநியோகச் சங்கிலி உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் புதிய திட்டங்களை அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.
உலகளவில் அரசியல் மற்றும் பாதுகாப்பு சவால்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா–ஜப்பான் இடையிலான பரஸ்பர நம்பிக்கையே இருநாடுகளின் மிகப்பெரிய பலமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனாயே டகாய்ச்சியை “தொலைநோக்கு பார்வை கொண்ட மக்கள் தலைவர்” என பாராட்டிய பிரதமர் மோடி, இந்தியாவின் ஆட்டோமொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளின் வளர்ச்சியில் ஜப்பான் ஆற்றிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என்றும் தெரிவித்தார்.
இந்த உச்சி மாநாட்டின் முக்கிய அம்சமாக, பாதுகாப்புத் துறையில் இந்தியா மற்றும் ஜப்பான் தங்களின் முதல் கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன் மூலம் இந்தோ–பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, கடல்சார் பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தும் நோக்கில் நவீன பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை இணைந்து உருவாக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
மேலும், செமிகண்டக்டர்கள், குவாண்டம் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பு தொடர்பான கூட்டுப் பணிகளை விரிவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், இந்தியாவில் பெரிய அளவில் பயோ-கேஸ் ஆலைகளை அமைப்பதற்கான ‘இந்தியா–ஜப்பான் பயோ-கேஸ் திட்டம்’ அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும் இந்தியா–ஜப்பான் இடையே 120 புதிய வணிக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் மூலம் சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு இந்தியாவுக்கு வந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். அடுத்த பத்தாண்டுகளில் ஜப்பானிலிருந்து 10 டிரில்லியன் யென் முதலீட்டை ஈர்ப்பதே இலக்கு என்றும் அவர் கூறினார்.
இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த சந்திப்பு, இந்தியா–ஜப்பான் இடையிலான மூலோபாய கூட்டாண்மையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முக்கிய மைல்கல்லாக அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.












Leave a Reply