சென்னை: அரசு பணியாளர் நியமனங்களில் முறைகேடுகள் நடைபெறுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதள பதிவில், தவெக ஆட்சியில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் லஞ்சம் பெறப்பட்டதாக அக்கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அரசு சார்பில் நடத்தப்பட்ட உதவிப் பேராசிரியர் தேர்விலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் வெளியாகியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, 2006-ல் பிறந்த ஒருவர் மற்றும் பெயரே இல்லாத ஒருவர் தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக வெளியான தகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அரசு வேலைவாய்ப்புகளை ஆளும் தரப்பினர் தங்களது விருப்பப்படி நிர்வகிப்பதாக குற்றம்சாட்டிய நயினார் நாகேந்திரன், “நாங்களும் ஊழல் செய்ய மாட்டோம், செய்பவர்களையும் விட மாட்டோம்” என்று கூறி ஆட்சிக்கு வந்த முதல்வர் விஜய் தலைமையிலான அரசில், மாமூல் வசூல், டெண்டர் முறைகேடுகள், உதவிப் பேராசிரியர் தேர்வில் குளறுபடிகள், அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் ஊழல் மற்றும் அரசு பதவிகளில் பாரபட்ச நியமனங்கள் என தொடர்ந்து புகார்கள் எழுந்து வருவதாக விமர்சித்துள்ளார்.
அரசு வேலைக்காக பல ஆண்டுகளாக தயாராகி காத்திருக்கும் இளைஞர்களின் கனவுகள் இத்தகைய முறைகேடுகளால் சிதைக்கப்படுவதாகவும், இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த விவகாரங்கள் அனைத்தையும் முதல்வர் விஜய் நேரடியாகக் கவனித்து, முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அரசு வேலைவாய்ப்புகளில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.













Leave a Reply