Advertisement

இந்த ஆவணங்கள் உங்ககிட்ட இருந்தா . தமிழக அரசின் இலவச வீட்டு மனை பட்டா பெறலாம்

 வீட்டு மனை இல்லாத ஏழை குடும்பங்களுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச வீட்டு மனை பட்டா திட்டம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் யார் பயனடையலாம், என்னென்ன நிபந்தனைகள் உள்ளன, விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் என்ன என்பதை அறிந்துகொள்ளுங்கள்

தமிழகத்தில் சொந்தமாக வீட்டு மனை இல்லாமல் அரசின் புறம்போக்கு நிலங்களில் பல ஆண்டுகளாக வசித்து வரும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு நிரந்தர குடியிருப்பு உரிமையை வழங்கும் நோக்கில் தமிழக அரசு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 2006ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம், வருவாய் துறையின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சொந்த வீட்டு மனை உரிமையை பெற்று பயனடைந்து வருகின்றனர்.

இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக, ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக வீடு கட்டி வசித்து வரும் தகுதியான குடும்பங்களுக்கு இலவசமாக வீட்டு மனை பட்டா வழங்கப்படுகிறது. சென்னை, தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சி பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அதிகபட்சமாக ஒரு செண்டு நிலமும், பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் வசிப்பவர்களுக்கு இரண்டு செண்டு நிலமும், கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு மூன்று செண்டு நிலமும் இலவசமாக வழங்கப்படுகிறது. பட்டா கிடைத்த பிறகு அந்த இடத்தில் புதிய வீடு கட்டிக்கொள்ளவும் அரசின் அனுமதி கிடைக்கும்.

ஆட்சேபனை உள்ள புறம்போக்கு நிலங்களில் வசித்து வருபவர்களுக்கும் அரசு மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன்படி, அதே பகுதி அல்லது அருகிலுள்ள ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வீட்டு மனை ஒதுக்கப்படும். அத்தகைய நிலம் இல்லாத பட்சத்தில், தனியார் பட்டா நிலங்களை அரசு கையகப்படுத்தியோ அல்லது உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வாங்கியோ தகுதியான பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை வழங்கப்படும். எனினும், அரசின் அனைத்து தகுதி நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் குடும்பங்களுக்கே இந்த சலுகை வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்புவோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் பெயரில் வீட்டு மனை அல்லது வேறு எந்த அசையா சொத்தும் இருக்கக் கூடாது. மேலும், குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்தை தாண்டக்கூடாது. ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலத்தில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து வசித்து இருக்க வேண்டும். அதேபோல், ஆக்கிரமித்து வசித்து வருவதை நிரூபிக்கும் தேவையான ஆவணங்களும் கட்டாயமாக இருக்க வேண்டும்.

இலவச வீட்டு மனை பட்டா பெற விண்ணப்பிக்கும் போது குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வீட்டு வரி ரசீது மற்றும் மின்சார ரசீது அல்லது குடிநீர் கட்டண ரசீது உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். தகுதியானவர்கள் அருகிலுள்ள தாலுகா அலுவலகம் அல்லது வருவாய் துறை அலுவலகத்தை அணுகி விண்ணப்பித்து, அரசின் இந்த முக்கிய நலத்திட்டத்தின் பயனை பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *