Advertisement

5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்; முதல்வர் விஜய் எடுத்த அடுத்த முடிவு

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற முதல்வர் விஜய், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தலுக்கு தயாரானது. இதனிடையே அதிமுக எம்.எல்.ஏக்களான, மதுராந்தகம் எம்.எல்.ஏ மரகதம் குமாரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ. எஸ். ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் எம்.எல்.ஏ., பி. சத்தியபாமா, அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா, கரூர் எம்.எல்.ஏ எம்.ஆர். விஜயபாஸ்கர், விராலிமலை எம்.எல்.ஏ சி. விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இதனால், திருச்சி கிழக்கு உள்பட 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்த சூழலில், திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த மனுவில், வேட்பாளர்களின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்குகள் நீதிமன்றத்தில் இருக்கிறது. அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் வரை குறிப்பிட்ட தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை கடந்த ஜூலை 10ஆம் தேதியன்று வந்த போது நீதிபதிகள், தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருந்தால் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போது தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடக்கூடாது என குறிப்பிட்டு திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வரும் வேளையில், இவ்வழக்கு கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி வந்தது. அப்போது, தமிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை எனத் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பும் பதில் மனுக்களையும் தாக்கல் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடை செப்டம்பர் 8ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், திருச்சி கிழக்கு தொகுதியின் வெற்றியை எதிர்த்து ஜூன் 17ஆம் தேதி தான் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், மே 10ஆம் தேதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். ராஜினாமா செய்த அதன் பிறகு அதனை சபாநாயகரும் ஏற்றுவிட்டார். எனவே எந்த தேர்தல் வழக்கும் நிலுவையில் இல்லை. காலியான தொகுதிகளுக்கு தேர்தல் வழக்கு தாக்கல் செய்ய முடியாது. இடைத்தேர்தல் அறிவிக்க தடை கோரி வழக்கை தாக்கல் செய்தவர், தேர்தல் வழக்கை தாக்கல் செய்தவர் அல்ல. அவர் தொகுதி வாக்காளரும் அல்ல. திருச்சி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்ற உள்நொக்கத்தின் அடிப்படையில் உரிமை எதுவும் இல்லாமல் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான மக்கள் எம்.எல்.ஏ இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுநலனுக்கு எதிரான இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல.

திருச்சி கிழக்குத் தொகுதியில் 20 பேர் போட்டியிட்ட நிலையில், தேர்தல் வழக்கை தாக்கல் செய்தவரை வெற்றி பெற்றவராக அறிவிக்க முடியாது. இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கப்பட்ட 5 தொகுதிகளுக்கும் பலமுனை போட்டி நடந்துள்ளது. எனவே காலியாக உள்ள தொகுதிகளுக்கு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவிக்க வேண்டும். பொதுநலன் கருதி இடைத்தேர்தலுக்கு அறிவிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். இந்த வழக்கை தொடர்ந்தவருக்கு அபராதம் விதித்து இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என முதல்வர் விஜய்யின் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *