Advertisement

சேலத்தில் மேயர் VS துணை மேயர் இடையே நாற்காலிக்கு வெடித்த சண்டை உச்சகட்ட மோதல்

சேலம் மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம், மக்கள் பிரச்சனைகளை பேசும் களமாக மாறாமல், மேயர் மற்றும் துணை மேயர் இடையேயான இருக்கைப் போட்டியால் ஒட்டுமொத்தமாக முடங்கிப் போயுள்ளது.

திமுகவைச் சேர்ந்த மேயர் ராமச்சந்திரனுக்கும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த துணை மேயர் சாரதா தேவிக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே இந்த இருக்கை தொடர்பான பிரச்சினை புகைந்து வந்தது. இந்தநிலையில், இன்று மாதாந்திரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மேயர் ராமச்சந்திரன் அரங்கிற்குள் நுழைந்தவுடனேயே, மேடையில் தனது இருக்கைக்கு அருகில் போடப்பட்டிருந்த துணை மேயரின் இருக்கையை உடனடியாக அகற்றுமாறு அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதற்கு மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த துணை மேயர் சாரதா தேவி, தனது இருக்கையை மேடையில் இருந்து அகற்றுவதற்கு யாருக்கும் எவ்வித விதிகளோ அல்லது உரிமையோ கிடையாது என்று கூறி, அதே இருக்கையில் பிடிவாதமாக அமர்ந்தார்.

இதில் இருவருக்குள்ளும் இந்த வாக்குவாதம் நீடித்த நிலையில், “துணை மேயரின் இருக்கை அகற்றப்படாவிட்டால் நான் மேடையில் அமர மாட்டேன்” என்று கூறி, மேயர் ராமச்சந்திரன் கீழே இறங்கிச் சென்று கவுன்சிலர்கள் அமரும் நாற்காலியில் போய் அமர்ந்தார். இதற்குப் போட்டியாகத் துணை மேயர் சாரதா தேவியும் மேடையின் கீழே அமர்ந்து, மேயர் மேடைக்கு வராவிட்டால் தானும் அறவழியில் போராடப் போவதாகக் கூறி தர்ணாவில் ஈடுபட்டார்.

இந்த நாற்காலிச் சண்டையால் குடிநீர் விநியோகம் தனியாருக்கு வழங்குவதை ரத்து செய்தல், குப்பை மேலாண்மை விதிகள் மற்றும் சமீபத்தில் மாநகராட்சிப் பொறியாளர் அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை போன்ற எந்தவொரு மக்கள் பிரச்சனையையும் கவுன்சிலர்களால் பேசமுடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சக திமுக கவுன்சிலர்களே தங்களது சொந்த மேயர் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டத் தொடங்கினர்.

மீண்டும் அரங்கிற்குள் வந்த மேயர் ராமச்சந்திரன், கூட்டத்தை நடத்த விடாமல் தடுப்பதாகக் கூறி துணை மேயர் சாரதா தேவியை இரண்டு மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்தார். ஆனால், தன்னை சஸ்பெண்ட் செய்ய மேயருக்கு அதிகாரம் இல்லை என்று கூறி, தனக்கு நீதி கிடைக்கும் வரை மேடையிலேயே உண்ணாவிரதப் போராட்டத்தை தொடரப் போவதாகத் துணை மேயர் அறிவித்துள்ளார்.

இந்த உச்சகட்டப் பரபரப்புக்கு இடையே, கூட்டத்தின் அனைத்துத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக கூறிவிட்டு மேயர் அங்கிருந்து கிளம்பிச் சென்றது பரபரப்பை கிளப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *