Advertisement

முதலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேத்துங்க”-அன்பில் மகேஷ்  ஓபன் சவால்

திருச்சியில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது சமூக வலைத்தளங்களில் தவெக தொண்டர்கள் முதலமைச்சர் விஜய்யை ‘வருங்காலப் பிரதமர் விஜய்’ என்று கொண்டாடி வருவது குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அன்பில் மகேஷ் பதிலளித்து பேசுகையில்,

அவர்கள் தங்களது தலைவரை எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம், அது அவர்களுடைய தனிப்பட்ட இஷ்டம். ஆனால் என்னைப் பொறுத்தவரை வருங்காலப் பிரதமர் என்று பேசுவதை விட, தற்போது முதலமைச்சராக இருக்கும் அவர் தமிழக மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆனது என்பதுதான் முக்கியக் கேள்வி.

தேர்தல் நேரத்தில் ஆறு இலவச சிலிண்டர்கள் தருவோம், பின்னர் அதை மூன்று சிலிண்டர் ஆக்கினீர்கள். எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் அனைவருக்கும் வழங்கப்படும் என்று கூறிவிட்டு, தற்போது ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்குள் இருந்தால் மட்டும்தான் இந்த சிலிண்டர் சலுகை வழங்கப்படும் என்று நிபந்தனை விதிக்கிறீர்கள். அதேபோல் சென்னையில் பேருந்து ஏறினால் கன்னியாகுமரி வரை பெண்கள் மற்றும் பொதுமக்கள் இலவசமாக போகலாம் என்று தேர்தல் மேடையில் சொன்ன வாக்குறுதியைப் பற்றி இன்று வரை நீங்கள் வாயே திறக்காமல் மௌனம் காப்பது ஏன்?

படித்த இளைஞர்கள் வீட்டில் வேலை இல்லாமல் இருந்தால் மாதம் 4,000 ரூபாய் உதவித்தொகை தருவோம் என்று சொன்ன வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. திமுகவின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையில் வெறும் பெயரை மட்டும்தான் மாற்றியுள்ளீர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதம் 2,500 ரூபாய் தருவோம் என்று சொன்ன தொகையை இன்னும் பெண்களுக்கு வழங்கவில்லை.

மீனவர்களுக்கு இடைக்கால நிதியாக 20,000 ரூபாய் தருவதாக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்ததையும் இன்று வரை பேசாமல் அப்படியே மூடி மறைக்கப் பார்க்கிறீர்கள். இறுதியாக, தமிழக மக்கள் உங்களை முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்ததற்கு, நீங்கள் மக்களுக்குக் கொடுத்த பணிகளையும் வாக்குறுதிகளையும் முதலில் முழுமையாக நிறைவேற்றுங்கள். அதைச் செய்து முடித்த பிறகு நீங்கள் இந்தியாவின் பிரதமராக ஆனாலும் சரி, அல்லது அமெரிக்காவின் ஜனாதிபதி ஆனாலும் சரி, அதைப்பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை” என்றார்.

Advertisment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *