மும்பையில் பரபரப்பு: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிவி நடிகர் ரோஹித் சாந்தல் போக்சோவில் கைது!
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 16 வயது சிறுமிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து, தாக்குதல் நடத்திய வழக்கில் பிரபல தொலைக்காட்சித் தொடர் நடிகர் ரோஹித் சாந்தல் (29) போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர் டார்ச்சர்.. வீட்டின் அருகே தாக்குதல்!
மும்பை கிழக்கு புறநகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், தொலைக்காட்சி நடிகர் ரோஹித் சாந்தலுக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ரோஹித் சாந்தல் அந்த சிறுமியின் செல்போன் எண்ணிற்குப் பல்வேறு எண்களில் இருந்து தொடர்ந்து தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதன் உச்சகட்டமாக, கடந்த 5-ம் தேதி அந்த சிறுமியின் வீட்டின் அருகே அவரைப் பின்தொடர்ந்து சென்று வழிமறித்த ரோஹித், சிறுமியைத் தகாத வார்த்தைகளால் திட்டி அவர் மீது கொடூரத் தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளார்.
சிறுமியின் புகார் – போலீசார் அதிரடி நடவடிக்கை
இந்த அதிர்ச்சி சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி, உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனது புகாரில்:
”நடிகர் ரோஹித் சாந்தல் எனது செல்போனுக்கு வெவ்வேறு எண்களில் இருந்து கூப்பிட்டு மன உளைச்சலை ஏற்படுத்தினார். கடந்த 5-ம் தேதி என் வீட்டின் அருகே பின்தொடர்ந்து வந்து தகாத வார்த்தைகளால் பேசி என் மீது தாக்குதல் நடத்தினார்,” என்று சிறுமி குறிப்பிட்டுள்ளார்.
சிறுமியின் புகாரைத் தொடர்ந்து, மும்பை போலீசார் நடிகர் ரோஹித் சாந்தல் மீது போக்சோ (POCSO) சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து தகிசர் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற போலீசார், அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.
சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்
கைது செய்யப்பட்ட நடிகர் ரோஹித் சாந்தல், போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்ற உத்தரவின்படி, தற்போது அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர்
கைது செய்யப்பட்டுள்ள ரோஹித் சாந்தல், திரையுலகிற்குள் நுழைவதற்கு முன்பாக மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கத்திற்காக (MCA) கிரிக்கெட் விளையாடியுள்ளார் என்பதும், மாவட்ட அளவிலான தற்காப்புக் கலை (Martial Arts) போட்டிகளில் பங்கேற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் இந்தி சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Leave a Reply