Advertisement

இனி PF-ல் புதிய நடைமுறை.. ரூ.1,800 மட்டுமே கட்டாயம்; ஊழியர்களுக்கு அதிக சுதந்திரம் வழங்கிய மத்திய அரசு!

புதுடெல்லி: ஊழியர்களின் வருங்கால சேமிப்பை எளிமைப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு புதிய ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டம்–2026-ஐ அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையின்படி, மாதச் சம்பளம் எவ்வளவு இருந்தாலும் ரூ.1,800 மட்டுமே கட்டாய EPF பங்களிப்பாக இருக்கும். அதற்கு மேல் சேமிக்க விரும்பும் ஊழியர்கள் தங்கள் விருப்பப்படி கூடுதல் தொகையை செலுத்தலாம்.

தற்போதைய EPF விதிகளின்படி, ரூ.15,000 வரை உள்ள அடிப்படை ஊதியத்தில் 12 சதவீதமான ரூ.1,800 கட்டாயமாக பிடித்தம் செய்யப்படுகிறது. புதிய திட்டத்திலும் இந்த வரம்பே தொடர்கிறது. அதாவது, ஒரு ஊழியரின் சம்பளம் ரூ.1 லட்சமாக இருந்தாலும், கட்டாய EPF பங்களிப்பு ரூ.1,800 மட்டுமே இருக்கும்.

ஓய்வுக்கால சேமிப்பை அதிகரிக்க விரும்பும் ஊழியர்கள், தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் கூடுதல் தொகையை EPF கணக்கில் செலுத்தலாம். ஆனால், அந்த கூடுதல் தொகைக்கு இணையாக நிறுவனமும் கட்டாயமாக பங்களிக்க வேண்டும் என்ற விதி இனி இருக்காது. நிறுவனங்கள் விரும்பினால் மட்டுமே கூடுதல் தொகையை செலுத்த முடியும்.

மேலும், ஊழியர்களும் நிறுவனங்களும் தேவைக்கேற்ப இந்த கூடுதல் பங்களிப்பை எப்போது வேண்டுமானாலும் குறைக்கவோ அல்லது நிறுத்திக்கொள்ளவோ முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

PF கணக்கில் இருந்து முன்பணம் பெறுவதற்கான விதிகளும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை இருந்த 13 பிரிவுகள், தற்போது மூன்று முக்கிய பிரிவுகளாக மாற்றப்பட்டுள்ளன.

அவை:

  • மருத்துவம், கல்வி, திருமணம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள்
  • வீடு வாங்குதல் அல்லது கட்டுதல் தொடர்பான வீட்டுத் தேவைகள்
  • சிறப்புச் சூழ்நிலைகள்

இந்த மூன்று பிரிவுகளின் கீழ் எளிதாக PF முன்பணத்தை பெற முடியும்.

புதிய விதிகளின்படி, தகுதியான ஊழியர்கள் தங்களின் PF சேமிப்பில் இருந்து 100 சதவீதம் வரை முன்பணமாக பெற அனுமதிக்கப்படுவார்கள். இருப்பினும், அவசர தேவைகளுக்காக கணக்கில் குறைந்தபட்சம் 25 சதவீதத் தொகை இருப்பாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்த தொழிலாளர்களின் PF பங்களிப்பு சரியாக செலுத்தப்படுவதை உறுதி செய்யும் பொறுப்பு இனி முதன்மை நிறுவனங்களிடமே இருக்கும். ஒப்பந்ததாரர் PF பதிவு செய்யாத நிலையிலும், தொழிலாளர்களுக்கான PF தொகை செலுத்தப்படுவதை கண்காணிக்க வேண்டியது முதன்மை நிறுவனத்தின் பொறுப்பாக EPFO புதிய விதிகளில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

புதிய EPF திட்டம்ஊழியர்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையையும், ஓய்வூதிய சேமிப்பில் விருப்பத்தேர்வையும் வழங்குவதுடன், PF விதிகளை மேலும் எளிமைப்படுத்தும் முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *