Advertisement

6 காலியிடங்களில் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது; தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு

தமிழகத்தில் காலியாக உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என்று வலியுறுத்தி, இந்திய தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் ஐ.எஸ். இன்பதுரை, டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் நேற்று மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள காலியிடங்களில் உடனடியாக இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும், தவெக அரசு பெரும்பான்மையை உறுதி செய்வதற்காக அதிமுக எம்.எல்.ஏ.க்களை கட்சி மாறச் செய்ததாகவும், அதில் முதல்வர் விஜய் நேரடியாக ஈடுபட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

அதிமுக கொறடா உத்தரவை மீறி 25 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும், பின்னர் அவர்களில் 21 பேர் மன்னிப்புக் கடிதம் அளித்ததாகவும், மீதமுள்ளவர்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததாகவும் இன்பதுரை தெரிவித்தார்.

ராஜினாமா செய்த உறுப்பினர்களிடம், எந்த காரணத்தால் பதவியை விலகுகிறார்கள் என்பதை சட்டப்பேரவைத் தலைவர் முழுமையாக விசாரித்திருக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாமல் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டது தவறான நடவடிக்கை என்றும் அவர் கூறினார்.

மேலும், கட்சி தாவல் தொடர்பான விவகாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், இதுபோன்ற வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், சுயலாபத்திற்காக கட்சி தாவியதாக குற்றம்சாட்டப்படும் 6 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றத்தை அணுகியுள்ளதாக அவர் கூறினார்.

இதற்கிடையில், அதிமுக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தவெக தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ பதில் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *